உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோதிகஞ்ச் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி இந்த ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள கடைப்பகுதிக்கு இரவு 8 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த சலீம் என்பவர் வீட்டுக்கு தேவையான பொருளை வாங்க சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கடையில் தேவையான பொருள்களை வாங்கிய அவர், பின்னர் அதற்கு காசு கொடுத்த போது அவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக கடைக்காரருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கடைக்காரர் சலீமை தாக்கியுள்ளார். மேலும்,அவரோடு சேர்ந்து மேலும் சில கடைக்காரர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
நடுரோட்டில் வைத்து அவரின் சட்டையையும் கிழித்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சலீம் அங்கிருந்து ஓடி ரயில் தண்டவாளத்தின் முன் நின்று அந்த பகுதியில் வந்த ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மருவத்துவமனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து சலீமின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.