கொரோனா தாக்கம் நாடு முழுவதும் மிகத் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. ஜூன் ஜூலை இறுதிக்குள் அதிகபடியான தொற்று பாதிப்புகள் ஏற்படும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60 நாட்களை நெருங்கி வருகிறது.
இதனால் உண்டாகியிருக்கும் பொருளாதார சரிவை மீட்டெடுப்பது குறித்து எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்காமல் மத்திய மோடி அரசோ, தன்னுடைய எதேச்சதிகாரத்தையும், இந்துத்வ கொள்கைகளையும் இந்த இக்கட்டான பேரிடர் காலத்தின் போதும் திணிப்பதில் தவறாமல் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கடந்த ஒரு மாதத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் நீட்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண்கள் தலைமையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை 3 மாதம் கழித்து தற்போது கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை.
பிஞ்ச்ரா டோட் என்றக் குழுவைச் சேர்ந்த தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகிய இரு மாணவிகளை கைது செய்த டெல்லி போலிஸ், சட்டப்பிரிவுகள் 186 மற்றும் 353ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நேற்று (மே 23) மாலை வீட்டில் இருந்த இருவரையும் டெல்லி ஜாஃப்ராபாத் போலிஸ் கைது செய்ததோடு, அவர்களுக்கு குடும்பத்தினரிடம் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என கண்டனங்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சாய்ராம் நாவேத், பிப்ரவரி மாதம் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மே மாதத்தில் போலிஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது. கைது நடவடிக்கைக்கு பதில் விசாரணைக்கு மட்டுமே அவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை கலவரமாக்கிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா மற்றும் மத்திய இணையமைச்சருக்கு பதில் ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது மோடி அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதமானது என பலர் எதிர்ப்பு கண்டனும் தெரிவித்துள்ளனர்.