கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த கொரோனா ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் அறிப்பைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிதியமைச்சரின் இத்தகைய அறிவிப்புகள் ஏழை மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவாது என பெருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரகுராம் ராஜன், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது மட்டும் போதாது; வேலை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவுள்ளது. இதனை மீட்க வேண்டும் என்றால் அதிக நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பாக முதலில் சரிவை சரிசெய்யவேண்டும். அதற்கு சரிவை தடுத்து நிறுத்தவேண்டும். அதன்படி பெரிய நிறுவனங்கள், வங்கிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
அவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஊக்கத்தொகை அளிக்கவேண்டும். அதுதான் உடனடி தேவை; அப்போதுதான் மீண்டு வர முடியும். வெறும் சீர்திருத்த அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை. குறிப்பாக பொருளாதாரத்தோடு மக்களை காப்பாற்றவேண்டும். இதை உணர்ந்து அரசு செயல்படவேண்டும். மேலும் அடுத்தக்கட்ட ஊக்கத்தொகையை அரசு வழங்காவிட்டால் பொருளாதாரம் மேலும் சரியும்.
இந்த சூழலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். அரசின் இலவச உணவு, தானியங்கள் அவர்களின் தேவையை போக்க போதுமானது அல்ல. அதாவது வெறும் தானியத்தை சாப்பிட்டால் போதாது.
அவர்கள் காய்கறி, பால், சமையல் எண்ணெய் வாங்கவேண்டும். இன்னும் ஒருபடி மேலேச் சென்றால் வாடகை தரவேண்டும். இதற்கெல்லாம் பணம் தேவை. அதனை வழங்காமல் பணம் வழங்கி என்ன பயன். மேலும் அவர்களுக்கு வேலையை உறுதி செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.