பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு நேற்று இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் ரிபப்ளிக் டிவி இணை நிறுவனரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் குணால் கம்ரா வெளியிட்டார். அதில், அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் பல கேள்விகளை கேட்டுள்ளார். அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனவும் கேள்வி எழுப்புகிறார் குணால்.
அந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்கத் தடை விதித்தது. இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா ஏர் இந்தியா விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குணால் கம்ரா, “நன்றி இண்டிகோ, ஆறு மாத தடை நியாயமானது. மோடிஜி ஏர் இந்தியாவை நிரந்தரமாக முடக்குவது என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை 45 நிமிடங்கள் தாமதப்படுத்தி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு, அவருக்கு தடை ஏன் விதிக்கப்படவில்லை எனவும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.