பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, நடுவானில் ‘ரிபப்ளிக் டிவி’ இணை நிறுவனரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியை சந்தித்தது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக குணால் கம்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், அர்னாப் கோஸ்வாமியிடம் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். ஆனால், அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்.
தொடர்ந்து, அந்த வீடியோவில் பேசும் குணால் கம்ரா, ‘Viewers wants to know' (பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்) நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும் பேசியுள்ள அவர், “நான் இதை ரோஹித் வெமுலாவிற்காகச் செய்கிறேன். ரோஹித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் இதைச் செய்யலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
ரோஹித் வெமுலா தலித் ஒடுக்குமுறைக்கு ஆளாகி 2016ம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அப்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய அர்னாப் கோஸ்வாமி, விவாத நெறியாளராகப் பங்கேற்று, ரோஹித் மரணத்தை அரசியலாக்குவதில் ‘தலித்’ எனும் அட்டை பயன்படுத்தப்பட்டதா என விவாதத்தில் கேள்வியெழுப்பினார்.
அர்னாப் கோஸ்வாமியின் இந்த மனிதத்தன்மையற்ற பேச்சின் காரணமாகவே குணால் கம்ரா, நடுவானில் அர்னாப்பிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்ததாகக் கூறப்படுகிறது.
குணால் கம்ரா ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.