குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தி போலிஸார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி போலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, கோழிக்கோடு, ஐதராபாத், ராய்ப்பூர் என நாடு முழுவதும் மாணவர்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதற்கும், பா.ஜ.க அரசின் இத்தகைய அடக்குமுறைக்கும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவ - மாணவியர் மீது போலிஸார் நடத்திய தடியடி, மத்திய பா.ஜ.க அரசின் குரூர முகத்தையே காட்டுகிறது. ‘நாங்கள் வைப்பதே சட்டம், ஜனநாயக ரீதியில்கூட எதிர்க்கக்கூடாது’ என்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்!
‘எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. அதனால் நாங்கள் இயற்றும் சட்டங்களைச் சிறுபான்மை ஏற்கத்தான்வேண்டும்’ என்கிற பா.ஜ.க-வின் எதேச்சதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல, மக்கள் மன்றத்துக்கும் எதிரானதே. வரலாறு திரும்பும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மோடி அவர்களே!” என குறிப்பிடுள்ளார்.