மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த மசோதாவிற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திரிபுரா மற்றும் அசாம் மாநில மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் தி.மு.க இளைஞரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
ஆயிரக்கணக்கான இளைஞரணி தொண்டர்கள் கலந்துகொண்டு பேரணியாகச்சென்று அண்ணா சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்ட நகலைக் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை போலிஸார் கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இலங்கை தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக மோடி அரசு செய்துள்ள மிகப் பெரிய அநீதி இது. இதனைக் கண்டித்தும், பா.ஜ.க அரசின் அடிமையாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்தும் தி.மு.க இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டம் மசோதா திரும்பப் பெறப்படும் வரை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.