கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, குடியரசுத் தலைவர் பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அப்போது பேசிய பிரதமர் மோடி, “தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெரும்” என்றார். அப்போதில் இருந்து மோடி, எங்கு சென்றாலும் '400 பார் (இடம்)' என்று கோஷமிட்டு வருவார்.
இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, எங்கு சென்று பரப்புரை மேற்கொள்ளும்போதெல்லாம், அங்கே '400 இடங்களில் வெற்றி' என்று முழக்கமிட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர், மோடி என பலரும் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பேசி வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் கூட பாஜக 370 இடங்களிலும், கூட்டணியோடு 400 இடங்களிலும் வெற்றி பெரும் என்று பேசி வருகிறார். இவரது பேச்சுக்கு பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது ஒரு பிம்பமே என்பதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்தும் அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க முன்மொழிந்த தொகுதிகள் :
* 2017 குஜராத் சட்டமன்ற தேர்தல் - 150; ஆனால் வென்ற தொகுதிகளோ, 99
* 2018 சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் - 50; ஆனால் வென்ற தொகுதிகளோ, 15
* 2019 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் - 65; ஆனால் வென்ற தொகுதிகளோ - 25
* 2020 டெல்லி சட்டமன்ற தேர்தல் - 45; ஆனால் வென்ற தொகுதிகளோ - 8
* 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 118; ஆனால் வென்ற தொகுதிகளோ - 4 (அதிமுக ஆதரவுடன்)
வெற்றி பெறும் தொகுதிகள் என பாஜக முன்மொழிந்த எண்ணிக்கைக்கு, எதிர்மறையான முடிவுகளே கிடைத்தன என்பதற்கு கடந்த கால தேர்தல் முடிவுகளே சாட்சி!" என்று பேசியுள்ளார்.
இதன் மூலம் பாஜக ஒரு பிம்ப அரசியலை மக்கள் மத்தியில் காட்ட முனைகிறது அம்பலமாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பாஜகவுக்கு தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. பாஜக ஆளும் குஜராத், உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம், மல்யுத்த பெண் வீராங்கனைகள் பாலியல் புகார், மணிப்பூர் கலவரம் என அண்மையில் நடைபெற்ற பல பிரச்னைகளை சுட்டிக்கட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பாஜகவினருக்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு மணிப்பூர் கலவரத்தால் வட கிழக்கு மாநிலங்களில் 3 மாநிலங்களில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
அதோடு, இதுவரை அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் பலரும் திடீரென விலகியுள்ளனர். பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் வெறும் பிம்பத்தை மட்டுமே எதிரொலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.