நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்தது. இந்த சூழலில் ஜம்மு & காஷ்மீரில் நேற்று கூட்டணி நிறைவடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மொத்தம் 6 தொகுதிகளை கொண்ட ஜம்மு & காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு விவரம் பின்வருமாறு :
காங்கிரஸ் - உதம்பர், ஜம்மு, லடாக் ஆகிய 3 தொகுதிகளிலும்,
தேசிய மாநாட்டு கட்சி (Jammu & Kashmir National Conference) - அனந்தநாக், ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மக்கள் மத்தியில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.