திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு காப்புரிமையை பெற்றுத்தரும் IPRS எனும் (indian performing rights society) அமைப்பு. IPRS அமைப்பு தனியார் நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் , தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் திரைப்படப் பாடல்களுக்கான உரிமத் தொகையை அப்பாடலின் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு பெற்றுத் தரும் அமைப்பாகும்.
இந்த அமைப்பு சார்பில் சென்னை கதீட்ரல் சாலை தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்கள் விவேகா, மதன் கார்ககி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, ”கவிஞர்களுக்கான அட்சய பாத்திரமாகவும், கலைஞர்களுக்கான வழக்கறிஞராக இந்த அமைப்பு செயல்படுகிறது. கலைஞர்கள் பாவம் அவர்கள் கற்பனைவாதிகள், சட்டம் அறியாதோர், உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும், நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சுரங்கள் மொத்தம் 7 என்பதால் அதன் பிறகு இருக்கும் எண் , என்ன என்று கூட தனக்கு தெரியாது என்று என்னிடம் கூறினார். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது.
மேலை நாடுகளில் 100 பாட்டு எழுதினால் அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை. பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவு வாங்கி விட முடியும். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் பாட்டெழுதி சம்பாதித்து தீவை வாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் 7,500 பாடல் எழுதிவிட்டேன், இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் இருப்போரால் 25 ஆண்டுகள் இருக்க முடியும், அதிலும் 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும். கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். அரசு, நிறுவனம், நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். 300 கோடியை தாண்டி ராயல்டியை இவர்கள் பெற்றுள்ளனர்.
இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் பாவம். இவர்கள்தான் உருவாக்குபவர்கள் , மூலமானவர்கள் , எனவேதான் இவர்களுக்கு ராயல்டி வேண்டும் என்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி.சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர் அவர்.
குன்றின்மீது நின்று கூவினாலும் ஊடகம் மூலம் சென்றால்தான் அது ஊர் சென்று சேரும். சமூக ஊடகங்களால் செய்திகள் குறித்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அச்சு ஊடகங்கள் அளவு பிற ஊடகங்களை நம்புவதில்லை என பலர் கூறுகின்றனர். நானும் அச்சு ஊடகங்களை அதிகம் நம்புகிறேன். தொலைக்காட்சி ஊடகங்களும் நம்பகத்தன்மை கொண்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.” என கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய பாடலாசிரியர் விவேகா, ”18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பில் இணைந்தேன். படத்திற்கு எழுதிய பாடலுக்கு ஊதியம் பெறுகிறோம். ஆனால் கல்யாணம், கச்சேரி, விமானங்களில் அவை பயன்படுத்தப்படும்போது அதற்குரிய ராயல்டியையும் பெற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை கலைஞர்களுக்கு இந்த அமைப்புதான் ஏற்படுத்தியது. நேர்காணல்களில் கூட எங்களது பாடல்களை குறிப்பிட்ட விநாடிகளே எங்களால் பயன்படுத்த முடிகிறது.” எனக் கூறியுள்ளார்.