அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவிற்கு 5 நாள் சொந்த பயணமாக சென்றிருக்கிறார்.
மியான்மருக்கான முன்னாள் நேபாள தூதரான பீம் உதாஸின் மகளும், CNN தொலைக்காட்சியின் மூத்த டெல்லி செய்தியாளரான சும்னிமாவின் திருமணத்திற்காக ராகுல் காந்தி நேபாளம் சென்றிருக்கிறார்.
இதற்கான இரவு விருந்து காத்மண்டுவில் உள்ள பிரபலமான ஹோட்டலில் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தியும் பங்கேற்றிருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரவ விட்டு நேபாளத்திற்கான சீனாவின் பெண் தூதருடன் ராகுல் காந்தி பார்ட்டிக்கு சென்றிருக்கிறார் என வழக்கம் போல் பொய் செய்தியை பரப்பியிருக்கிறார்கள்.
இதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா, நண்பரின் அழைப்பின் பேரில் திருமணத்துக்காக ராகுல் காந்தி சென்றிருக்கிறார் எனக் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸார் பலரும் பாஜகவினரின் இந்த இழி செயலை கண்டித்து பதிவிட்டுள்ளனர்.
இப்படி இருக்கையில், India Today Anti Fake News War Room இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி அந்த பார்ட்டியில் ஒன்றரை மணிநேரம் மட்டுமே பங்கேற்றார் என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த விருந்துக்கு சீன தூதரகம் தரப்பில் இருந்து எவரும் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ராகுல் காந்தி நேபாளத்திற்கு தனிப்பட்ட முறையிலேயே சென்றிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்து பொய் செய்திகளை பரப்பிய பா.ஜ.கவினருக்கு திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. மஹூவா மொய்த்ரா சரமாரியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதில்., ராகுலை விமர்சிக்கும் முன் உங்கள் காட்சியினர் தேநீர் கோப்பையில் மது ஊற்றி குடித்து வாழும் இரட்டை வேஷத்தை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றால் உங்களுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதேபோல, வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின், அரசியல்வாதி ஒருவர் இரவு விருந்துக்கு செல்வது மோசமான செயல் அல்ல. குறிப்பாக நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படங்களை பார்ப்பதை விட மோசமான செயல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைத்தன்மையற்ற வதந்திகளை காட்டுத்தீ போல பரப்புகிறார்கள். பொய் செய்தியை பரப்பும் பாஜகவின் தொழிற்சாலை ஜனநாயகத்துக்கே அபாயகரமானது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என காங்கிரஸார் பதிவிட்டுள்ளனர்.