நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின், 37-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, தலைமை தாங்கி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பின.
அமித்ஷாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர் ரஹ்மான் ழகரம் தாங்கிய தமிழனங்கு புகைப்படத்தை பகிர்ந்தார். ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் இந்தி தேசிய மொழி இல்லை என்றும், பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள் எனவும் பேசியிருந்தார்.
இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திதான் நமது தேசிய மொழி என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். நடிகர் சுதீப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் சுஷாந்த் மேத்தாவுடனான உரையாடலின் போது பேசிய பாடகர் சோனு நிகம், தனக்குத் தெரிந்தவரை, இந்திய அரசியலமைப்பில், இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை என்றும், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி, என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் மூத்த மொழி தமிழ் என்பதையும் அனைவருமே அறிவோம் என்றும், உலகின் பழமையான மொழி சமஸ்கிருதமா, தமிழா என விவாதம் நடந்து வரும் நிலையில் உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் கூறுவதாகவும் சோனு நிகாம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நம் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்றும், இந்தியை கட்டாயம் பேச வேண்டும் என்று பிறர் மீது மொழியைத் திணித்து, நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி நடைபெறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
எதற்காக அனைவரும் இந்தி பேச வேண்டும் எனுறு தெரியவில்லை., எந்த மொழி பேச வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்றும் சோனு நிகாம் கூறியுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.