சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு இசைவிழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று, விருதுகளை வழங்கி கலைஞர்களுக்கு சிறப்பு செய்தார்.
அதனையடுத்து, விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியவதாவது, “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ்ப் பேரவையின் சார்பில், இந்தப் பேரவையின் பொன்விழா பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, இசை விழா நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா என இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் முத்தமிழ்ப் பேரவையின் செயலாளர் இயக்குநர் அமிர்தம் அவர்களுக்கும், பேரவையின் தலைவர் ராமானுஜம் அவர்களுக்கும், துணைத் தலைவர் தம்பி குணாநிதி அவர்களுக்கும், மற்றுமுள்ள நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
இந்த முத்தமிழ்ப் பேரவை என்பது பெருமைக்குரிய ஒன்றாக - சிறப்புக்குரிய ஒன்றாக இருப்பதற்கு காரணம், இது தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு. இது தொடங்கிய காலத்தில் இருந்து தலைவர் கலைஞர் அவர்கள் ஆண்டுதோறும் ஒரு நாள் இந்த முத்தமிழ்ப் பேரவைக்காக நேரத்தை ஒதுக்கி, அவ்வாறு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அவரும் மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டு, தன்னுடைய கரங்களால் அந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பது அவருடைய கடமையாகவே கருதி அதை செயலாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவருடைய வழியில் நானும் இன்றைக்கு அந்தக் கடமையை ஆற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். முத்தமிழ்ப் பேரவையை கடந்த 50 ஆண்டு காலமாகக் கட்டிக் காத்து வரும் நம்முடைய இயக்குநர் அமிர்தம் அவர்கள் நான் ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று அவரே முன்கூட்டியே இரண்டு மாதத்திற்கு முன்பு என்னிடம் தேதியைச் சொல்லி அவர் அழைப்பது உண்டு.
அழைப்பது உண்டு என்று சொல்வதைவிட, கட்டளையிடுவதுண்டு. அவருடைய அந்த அன்பான கட்டளையை நான் ஏற்றுக் கொண்டு இதில் நான் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்த அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து வீருநடை போட்டு, சிறப்போடு, எழுச்சியோடு, ஏற்றத்தோடு இந்த முத்தமிழ்ப் பேரவை நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதன் இயக்குநர் அமிர்தம் அவர்களின் சாதனை என்பது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்த் திரை உலகில் எத்தனையோ சாதனைகளை அவர் ஆற்றி இருந்தாலும் முத்தமிழுக்கு அவர் ஆற்றி வரும் இந்த பங்களிப்பானது முத்தாய்ப்பாக இது அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் துமிலன் எழுதியிருக்கும் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் சுருக்கப்பட்ட வடிவத்தை, தம்பி குணாநிதி அவர்கள் தயாரித்து இங்கு வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
இசையுலகத்தில் முடிசூடா மன்னராக - ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் திரு. ராஜரத்தினம் அவர்கள். அவரைப் பற்றிச் செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் சொன்னதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
"நாதஸ்வர வித்வான்களில் திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் ஒரு பெரிய மேதாவி. காதில் கடுக்கன் மின்ன, கிராப்புத் தலையோடு அவர் வாசிக்கும் அழகே தனி அழகு. அவருக்கு முன்பெல்லாம், நாதஸ்வரம் என்பது ஒன்றரை முழம்தான் இருக்கும். முதன்முதலில் ராஜரத்தினம் அவர்கள்தான் நாதஸ்வரத்தை நீளமாகச் செய்து வாசிக்க ஆரம்பித்த பெருமைக்கு உரியவர்" என்று செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் பெருமையோடு சொல்லியிருக்கிறார். அத்தகைய ராஜரத்தினம் அவர்களின் பெயரில் ராஜரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதன்முதலில் உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
ஆண்டுதோறும் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கிறீர்கள். அவரால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ் பேரவையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் வரும் ஆண்டில் இருந்து ஒரு விருது வழங்க வேண்டும் என்று சென்ற ஆண்டு நடந்த விழாவில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். வேண்டுகோள் அல்ல, ஒரு கட்டளையை இந்த அமைப்புக்கு நான் பிறப்பித்தேன். அதை மனமுவந்து நம்முடைய அமிர்தம் அவர்கள் ஏற்றுக் கொண்டு இந்த ஆண்டே அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
அதற்காக முதலில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு கலைஞர் விருது முதன் முதலாக இந்த அமைப்பின் சார்பில் தரப்படுவது யாருக்கு என்று கேட்டால், புரட்சித் தமிழன் நம்முடைய சத்யராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் மிக மிக தகுதி வாய்ந்தவருக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர் சொன்னார், “அதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன்.” உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். அதுதான் உண்மை.
கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசி நடித்தவர். தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். எனவே, அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலையுலகத்தில் இருந்து கொண்டே தன்னுடைய பகுத்தறிவு உணர்வை - சுயமரியாதை எண்ணத்தை - திராவிடக் கொள்கைகளை மறைக்காமல் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாகப் பேசக்கூடியவர் நம்முடைய சத்யராஜ் அவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு, இதே அரங்கத்தில் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அதில் சிறப்பான - துணிச்சலான கருத்துகளை எல்லாம் எடுத்துப் பேசி இருக்கிறார் நம்முடைய சத்யராஜ் அவர்கள். அவருக்குத்தான் கலைஞர் விருது இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சிவக்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கலைஞரின் வசனங்களைப் பேசி, தான் நடிக்க கற்றுக் கொண்டேன் என்பதைப் பற்றி அவரே குறிப்பிட்டு இருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு நான் நடிகராக மின்னிக் கொண்டிருப்பதாகவும், தான் நடிகனாக ஆனதற்குக் கலைஞர் என்ற ஆசிரியர்தான் காரணம் என்றும் அனைத்துக் கூட்டங்களிலும் பேசிக் கொண்டிருப்பவர் நம்முடைய சத்யராஜ் அவர்கள்.
அதேபோல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இடமும் மரியாதை வைத்திருப்பவர் நம்முடைய சத்யராஜ் அவர்கள். கலைஞர் மேல் தனக்கு இருக்கும் மரியாதையை மறைக்காதவர் என்பதுதான் அவருக்குள்ள பெருமை. அவருக்கு மீண்டும் மீண்டும் என்னுடைய பாராட்டுகளை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ராஜரத்னா விருதைத் திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரம் அவர்கள் பெற்றுள்ளார். திருப்பாம்புரம் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தலைவர் கலைஞர் கையால் கலைமாமணி விருது பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்நாடு அரசவைக் கலைஞர் என்ற தகுதியைப் பெற்றவர். அவருக்குத்தான், இன்றைக்கு நான் ராஜரத்னா விருதை வழங்கி இருக்கிறேன். தமிழ் இசை வரலாற்றில் திருப்பாம்புரம் குடும்பத்திற்காகவே பல பக்கங்களை ஒதுக்க வேண்டும். இப்படியான சிறப்புக்குரியவர் இந்த விருதைப் பெறுவது பெருமைக்குரியது!
இயல் செல்வம் விருதை ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் பெற்றிருக்கிறார். பொதிகை தொலைக்காட்சி மூலமாகப் பொதுவெளியில் அறிமுகம் ஆனாலும் இன்று எங்கள் கழகத்தின் முழக்கமாகச் செயல்படக் கூடியவர். கவிஞர் - சிறுகதையாசிரியர் - புதின எழுத்தாளர் - கட்டுரையாளர் - பேச்சாளர் - மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆற்றல் கொண்டவர்.
இசைச் செல்வம் விருதை முனைவர் காயத்ரி கிரீஷ் அவர்கள் பெற்றிருக்கிறார். சுமார் 38 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் காயத்ரி கிரீஷ் அவர்கள், இசையில் அனைத்துத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திய சிறப்புக்குரியவர். தமிழ்ப் படைப்புகளை யூ-டியூப் சேனல்களில் கொண்டு வந்த வகையில் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.
நாதஸ்வரச் செல்வம் விருதைத் திருக்கடையூர் டி.எஸ்.எம்.உமாசங்கர் அவர்கள் பெற்றிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக, நாதஸ்வர இசையுலகத்தில் வலம் வரும் உமாசங்கர், தன்னைப்போலவே பல திறமைசாலிகளை உருவாக்கிக்கொண்டு வருகிறார். அவர் துறைக்குப் பெரிய பங்களிப்பை இதன் மூலமாக அவர் செய்கிறார்.
தவில் செல்வம் விருதை சுவாமிமலை சி.குருநாதன் அவர்கள் பெற்றிருக்கிறார். ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், பெரும்பள்ளம் பி.பி.வெங்கடேசன் ஆகியோரிடம் தவில் பயின்று, இன்றைக்கு உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டு வருகிறார். அப்படி சென்ற பல நாடுகளில் விருதுகளும் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.
கிராமியக்கலைச் செல்வம் விருதை முனைவர் தி.சோமசுந்தரம் அவர்கள் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் செயலாளரான சோமசுந்தரம் அவர்கள், கரகாட்டத்தின் வரலாற்றை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். சிலப்பதிகாரத்தில் ஆடல் கலை பற்றி முதுமுனைவர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார். அழகர் ஆட்டம் என்ற கலைவடிவத்தை உருவாக்கிய பெரும் கிராமியக் கலைஞர்.
நாட்டியச் செல்வம் விருதை திருமதி. பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் பெற்றிருக்கிறார். நாட்டிய உலகத்தில் தனக்கெனத் தனிப் பாணி மூலமாகத் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றவர் பார்வதி அவர்கள். பாடகியாக இருந்து, பிறகு, நடனத்தில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி, இப்போது அனைவர் கவனத்தையும் ஈர்ப்பவராக இருக்கிறார்.
விருதுகள் பெற்ற அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, முத்தமிழ்ப் பேரவை வழங்கும் இந்த விருதானது, முத்தமிழறிஞர் கலைஞரே வழங்கும் விருது போன்றது! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! இன்னும் பல விருதுகளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தலைவர் கலைஞரை ஏன் முத்தமிழறிஞர் என்று போற்றுகிறோம் என்றால், பேச்சாற்றல், எழுத்தாற்றல் என்று இயல் - இசை - நாடகம் என்ற மூன்று தமிழிலும் தன்னுடைய தமிழாற்றலால் முத்திரை பதித்தவர் அவர். அவரின் எழுத்தாற்றலுக்கு சிறு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால், "இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும். அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!" என்று எழுதியவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் பேசினாலும் இசை நயம் இருக்கும்.
அவர் எழுதியதை வாசித்தாலே இசைபோல இருக்கும். தலைவர் கலைஞரின் மனோகரா வசனம், எப்படி இசை வடிவமாக இருக்கிறது என்று என் மகள் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்ற விழாவில் இசைஞானி இளையராஜா அவர்கள் பாடியே காண்பித்தார். பொதுக்கூட்ட மேடைகளில் தலைவர் கலைஞர் உணர்ச்சிகரமாகப் பேசுவதை பார்க்கும்போது நாடகத்தமிழை நேரில் பார்க்கலாம். இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
முத்தமிழுக்கு இலக்கணமாக விருது பெற்ற நீங்கள் அனைவரும், உங்களைப்போல பல திறமைசாலிகளை வளர்த்தெடுக்கவும் செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம்முடைய முழக்கம்! அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும், செழிக்க வேண்டும்!
இடையில் சாதி, மதம் என்று அந்நிய மொழிகள் மூலமாகப் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், அனைத்தையும் தாங்கி, தமிழும் - தமிழினமும் - தமிழ்நாடும் நின்று நிலைக்கத் தமிழின் வலிமையும், நம்முடைய பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம்! எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு! அந்த இரண்டையும் கண் போல காக்க வேண்டும்! இதைதான் முத்தமிழ்ப் பேரவைக்கு என் பொன்விழாச் செய்தியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, தொய்வின்றி கலைப் பணியாற்றி வரும் முத்தமிழ்ப் பேரவையானது, ஐம்பதாம் ஆண்டு விழாவோடு நின்றுவிடாமல் நிச்சயம் நூற்றாண்டு விழாவையும் தொட வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டு, பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தனது கலைப்பணியைத் தொடர வேண்டும் என்று மனதார, நெஞ்சார என்னுடைய சார்பில் மட்டுமல்ல, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”