மாநகரம் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.,25ம் தேதி வெளியான படம் 'கைதி'.
கதாநாயகி, பாடல் என கமர்ஷியல் படங்கள் வரும் சமகாலத்தில் பாடல்களே இல்லாமல் கதையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறது கார்த்தி - லோகேஷ் கூட்டணியில் உருவான ‘கைதி’.
விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் கைதி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் படு ஜோராக ஓடி இன்றளவும் சாதித்து வருகிறது கைதி.
இவ்வாறு இருக்கையில், கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து படம் வெளியான மறுநாளே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்தது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சத்யராஜ் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “கைதி 2 குறித்து ஐடியா வந்தது என போனவாரம் லோகேஷ் பேசினார். பெரும்பாலும் அடுத்த பார்ட் வரும்னு நினைக்கிறேன். நமக்கும் இந்த லுங்கியெல்லாம் கட்டினாதான் செட் ஆகும் போல” எனப் பேசினார்.
இதையறிந்த ரசிகர்கள் ‘கைதி 2’ படம் குறித்து கார்த்தி பேசிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். விஜய் 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஆகையால் ‘கைதி 2’ உறுதியானால் விஜய் 64க்கு பிறகு உருவாகும் என எதிர்பார்க்கலாம்.