தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அதிரிபுதிரி ஹிட் அடித்து 30 நாட்களைக் கடந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது கைதி.
விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு போட்டியாக வெளியாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் கைதி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 100 கோடி ரூபாயை தாண்டிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனால் தயாரிப்பாளரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது கைதி.
இந்நிலையில், 30 நாட்களை தொடர்ந்து தியேட்டரில் வெற்றிகரமாக ‘கைதி’ படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், Hotstar ஸ்ட்ரீமிங் தளத்தில் படத்தை வெளியிட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். இதனை பலர் பொதுவெளியிலும் புலம்பித் தீர்த்து வந்தனர்.
ஹாட்ஸ்டாரில் கைதி படத்தை வெளியிட்டது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், “பைரசியை தடுக்கும் வகையிலேயே ஆன்லைனில் படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3வது வார கலெக்ஷன் குறைவை இதன் மூலமே தயாரிப்பாளர்கள் ஈடுகட்ட முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.