தமிழ் சினிமாவில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, அலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் பார்வதி.
அந்த நேர்காணலில் பார்வதி கூறியதாவது, “சினிமாவில் பெண் வெறுப்பை காட்சியாக வெளிப்படுத்துகின்றனர். நான் நடிக்கும் படங்களில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். பெண்ணை உயர்வாக சித்தரிப்பதற்கும் வெறுப்பு ஏற்படும்படி காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
பெண் வெறுப்பை கொண்டாடுவதற்கும், பிரதிபலிப்பதற்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. பெண் வெறுப்புள்ள ஒரு ஆண், சினிமாவில் பெண்ணிடம் அத்துமீறுகிறார் என்றால் அது பார்வையாளர்களிடம் கைதட்டல் பெற்றால் அந்த சினிமா பெண் வெறுப்பை கொண்டாடுகிறது.
அதேநேரத்தில், ஒரு சினிமாவில் பெண் வெறுப்புக் காட்சி கைதட்டல் பெறாமல் சரியா தவறா என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்பினால் அது சரியான சினிமா. அதுவே பெண் வெறுப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.
மேலும், ஜோக்கர், அர்ஜூன் ரெட்டி ஆகிய இரு படங்களின் வன்முறையை ஒப்பிட்டுப் பேசிய பார்வதி, “ ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் காதலர்களிடையே கன்னத்தில் அறைந்துகொள்வதை காட்டுகிறார்கள். அதை யூ-ட்யூபில் பார்ப்போரும் அதை கும்பல் மனநிலையோடு ஆதரித்து கமெண்ட் செய்கிறார்கள்” என்றார்.
அர்ஜூன் ரெட்டி நாயகன் தேவரகொண்டா முன்னிலையிலேயே, துணிச்சலோடு இப்படி கருத்து தெரிவித்த பார்வதியின் பேச்சு சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.