கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கோவா திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி, அங்கு கூடியிருந்தோர் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
கலந்துரையாடலின்போது, டாப்ஸி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கிட்ட ஒருவர் இந்தியில் பேசும்படி வலியுறுத்தியுள்ளார். உடனே பார்வையாளர்கள் பக்கம் திரும்பிய டாப்ஸி, “இங்கு உள்ள அனைவருக்கும் இந்தி புரியுமா?'' எனக் கேள்வி எழுப்ப, பலரும் இல்லை எனப் பதில் அளித்தனர்.
ஆனால், டாப்ஸி பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் பேச வேண்டும் எனத் தொடர்ந்து அந்த நபர் வலியுறுத்தியுள்ளார். டாப்ஸி சற்றும் யோசிக்காமல், “நான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களிலும் நடிக்கிறேன். அப்படியானால் நான் உங்களிடம் தமிழில் பேசலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
டாப்ஸியின் உடனடி எதிர்வினையால் அந்த நபர் ‘கப்சிப்’ ஆகியுள்ளார். டாப்ஸியின் இந்த அசத்தலான பதிலை அரங்கில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர்.
மற்றொரு நபர், 'பிங்க்' மற்றும் 'பட்லா' படங்களில் அமிதாப் பச்சனோடு நடித்த அனுபவம் குறித்து கேட்க, “பணிபுரியும் அனுபவம் தொடர்புடைய கேள்விகளை விட பார்வையாளர்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார். டாப்ஸியின் பேச்சு வைரலாகி வருகிறது.