2018-ல் ரிலீஸான படங்களில் உலகம் முழுக்க சக்கைப்போடு போட்ட படங்களில் ஒன்று ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்’. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களைத் தயாரிக்கும் மார்வெல் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்த ‘இன்ஃபினிட்டி வார்’ படம் இந்தியாவுலையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் எனப்படும் திரைப்பட தொடரின் மிக முக்கியமான படம் இப்போது வெளியாக இருக்கும் ‘எண்ட் கேம்’ தான்.
இதுவரை 21 படங்கள் மார்வெல் வரிசையில் வெளியாகியிருக்கின்றன. அந்த எல்லாப் படங்களுக்கான முடிவும் எண்ட் கேம் படத்தில் தான் இருக்கிறது என்பதால் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதைக் கருவாக வைத்து மார்வெல் நிறுவனம் அடுத்து வெளியாக இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ பாகத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்தப் படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைமும், சென்சார் பற்றிய தகவலும் வெளிவந்திருக்கிறது.
இந்திய சென்சார் அமைப்பு அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 1 நிமிடம் (181 நிமிடங்கள்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஏப்.,26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
மார்வெல் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ‘எண்ட் கேம்’ படத்தைக் காண ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் எண்ட் கேம் படத்துக்கான ப்ரிமியர் ஷோ நடைபெற்றது. இதில் ஹாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் பங்கேற்று படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.