பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப்பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு சார்பில் வெளியாகும் அறிவிப்புகள், கடிதங்கள் அனைத்தும் இந்தியிலேயே வெளியாகிவருகிறது.
அந்த வகையில் ஹிந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஹிந்தியில் கடிதங்களை அனுப்பி வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் தான் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு கேரள MP ஜான் பிரிட்டாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்னதாக ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து இந்தியில் வந்த கடிதத்துக்கு தமிழில் பதில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்திருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா. இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் இந்தி பேசாத மாநிலங்களின் எம்பிக்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவது அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "ஆங்கிலம் நன்கு அறிந்த அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் சொல்வதும், பேசுவதும், இந்தி பேசாத மாநிலங்களின் எம்பிக்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவதும் அதிகரித்துள்ளது. அறியாமல் நடைபெறும் தவறு அல்ல. அறிந்தே இந்தி திணிப்பை செய்கிறார்கள். தென் மாநில எம்பிக்கள் புரிந்து கொள்ளா முடியாவிட்டாலும் கவலை இல்லை என்றே கருதுகிறார்கள்.
ஏற்கனவே நான் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் உள்துறை இணை அமைச்சர் எனக்கு இந்தியில் எழுதிய கடிதம் தொடர்பாக தொடுத்த வழக்கில் அலுவலகத்திலிருந்து தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொண்டு, இனி அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று ஒன்றிய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? இல்லை மரத்து போனதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.