வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் எழும்பூர் தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம், இராயபுரம் தொகுதி, புதிய வண்ணாரபேட்டை, மொட்டை தோட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம்* மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, "வடசென்னை வளர்ச்சி திட்டம் கடந்த மார்ச் மாதம் தங்க சாலையில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இது வடசென்னையில் அனைவராலும் பாராட்டப்படுகிற அளவுக்கு மிக நேர்த்தியாக நடைபெற்று வரக்கூடிய திட்டமாக உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கொளத்தூர் பகுதியில் நேற்றைக்கு 'முதல்வர் படைப்பகம்' தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னை மாநகரத்திற்குட்பட்ட 10 இடங்களில் சுமார் 20 கோடி ரூபாய் செலவு படிப்பதற்கும், 30 கோடி ரூபாய் செலவில் பணியிட பகிர்வு மையமாகவும், 50 கோடி ரூபாயில் பத்து நூலகங்களுக்கு உண்டான இடங்களில் நூலகத்தின் தரத்தையும் படிக்கின்ற பகிர்ந்து பணியிடத்தையும் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வட சென்னையில் திரு.வி.க.நகர் தொகுதி எழும்பூர் தொகுதி துறைமுகம் மற்றும் ஆர்.கே.நகர் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு இன்று ஏழு இடங்களில் நூலகங்களை ஆய்வு செய்து நூலகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும், பல ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதற்கு வசதி குறைவான நூலகங்களை இடித்த புதிய நூலகம் கட்டுவதற்கு இன்றைக்கு ஆய்வினை மேற்கொண்டோம்.
ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் 25ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்ட நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.