உலகம்

”மொழியை பாதுகாத்ததால்தான் தமிழன் என்று நாம் அழைக்கப்படுகிறோம்” : மெல்போர்னில் அப்பாவு பேச்சு!

மொழியை பாதுகாத்ததால்தான் தமிழன் என்று இன்றுவரையில் நாம் அழைக்கப்பட்டு வருகிறோம் என அப்பாவு பேசியுள்ளார்.

”மொழியை பாதுகாத்ததால்தான் தமிழன் என்று நாம் அழைக்கப்படுகிறோம்” : மெல்போர்னில் அப்பாவு  பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற 67 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு, உரையாற்றினார்.

பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரைச் சென்றடந்தார். அங்கு மெல்போர்ன் தமிழ்ச்சங்கத்தில் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

தேசியம் என்றால் என்ன; திராவிடம் என்றால் என்ன என்பதில் சிலருக்கு ஐயப்பாடு உள்ளது. நாம் அனைவரும் இந்தியர்கள்; தமிழராக இங்கே வந்திருந்தாலும்கூட, தமிழ் உணர்வோடு இந்தியனாக வாழ வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசையும் எண்ணமும்! அதை நான் இங்கே வந்த பிறகும் உணர்ந்துகொண்டேன். ஆகவே, அவற்றைப் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மிகப் பெரிய அடையாளம் இந்தியா; உலகில் மிகப் பெரிய ஜனநாயகநாடும் நம்முடைய இந்தியாதான்; நமக்கெல்லாம் முகமாக இருந்து, சுதந்திரத்தைப் பெற்றுதந்தவர் மகாத்மா காந்தியடிகள்.

இந்த நாட்டிற்கென்று ஓர் அரசு உள்ளது. இந்த நாட்டிற்கென தனிச் சட்டம் உள்ளது. அந்த சட்டத்திட்டத்திற்குட்பட்டு நாம் வாழ்கிறோம், அவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாமும், அவர்கள் வகுத்திருக்கிற சட்டத்திட்டங்களுக்குட்பட்டு வாழ வேண்டும், வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் இங்கு வந்து, இந்த நாட்டின் அரசியலில் இருப்பவர்கள் குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ச் சமுதாயம் அவர்களை வாழ்த்துகிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றுஅவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவிலிருந்து வந்த தமிழனாக நாம் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வந்த தமிழன் என்ற ஒரு சொல்தான் மிகவும் முக்கியம்.

நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 12 ஆம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறார். அவர், நீங்கள் என்ன ஜாதி, மதம், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கேளாமல், ஒரு தமிழன் வீட்டு பெண் குழந்தைகள் பட்டப் படிப்பு படிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டில், நகரப் பேருந்துகளில் பெண்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்; அனைத்து மகளிரும் பயணம் செய்யலாம். ஏன் வெளிநாட்டிலிருந்து வந்த மகளிராக இருந்தாலும்கூட அவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம். இங்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், நாம் இந்தியராக இருப்போம்; உணர்வுபூர்வமாக தமிழனாக வாழ்வோம்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பொறியியல் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள், தமிழ் பேசுவதில்லை. ஆனால், அவர்களை பொறியாளர்களாக்கி, இந்த நாட்டிற்கு அனுப்பியவர்கள் தமிழர்கள்தான். தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பலர், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கெல்லாம், அவர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களாக வாழ்ந்த காரணத்தினால்தான், இலங்கை, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழும் உள்ளது. மலேசியாவில் கூடுதல் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. அந்த அரசுகளுக்கெல்லாம் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நாட்டு அரசு, Victoria School of Language என்ற அமைப்பின்மூலம், தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கிற பல்வேறு மொழிகளையும், கற்றுக்கொடுக்கின்ற உயர்ந்த பண்பை கொண்டுள்ளது. அதற்காக இந்த அரசை உங்கள் சார்பாக நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதே அமைப்பைப்போல் இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டுமென்பது என்னுடைய ஆசையாகும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறுபான்மை மொழியினராக இருந்தாலும், அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொடுக்கிற வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தமிழுக்கென்று தமிழக அரசைப் போன்று வேறு யாரும் செய்திருக்க முடியாது. தமிழ் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் வழியில் இன்றைய முதலமைச்சர் அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான், எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாத அளவிற்கு தமிழ் வாழ்ந்திருக்கிறது, வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது உங்களுக்கும் நன்றாகவே புரியும். தமிழ், இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. இந்திதான் ஆட்சி மொழியாக உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்கள், நாடாளுமன்றத்தில் தமிழுக்கான உரிமை வேண்டுமென்று பேசியபோதுதான், அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், ’நீங்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளாத வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும், தமிழ் உங்கள் தாய் மொழியாகவும் இருக்கும்’ என்று நாடாளுமன்றத்திலேயே நமக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்கினார்.

தமிழ்நாட்டில், தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும், 2006 ஆம் ஆண்டு வரை, முதல் மொழி தாய் மொழி என்று இருந்தது. மெக்காலே பிரபு அவர்கள், 1835-ல் அனைவரும் கல்வி கற்கலாம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அதுவரை ஒரு குறிப்பிட்ட சமூகம்தான், இன்னும் சொல்லப்போனால் 10 சதவிகிதம் பேர் மட்டுமே படிக்கலாம்; அவர்கள்தான் இந்து ஆலயங்களுக்குள் செல்லலாம்; மற்றவர்கள் யாரும் கல்வி கற்கக் கூடாது என்ற நிலைமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பெரியார் முதற்கொண்டு, அடுத்து பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர் மற்றும் இன்றைய முதலமைச்சர் வரை தமிழ் மொழியை முன்னெடுத்துள்ளார்கள். 1835-ல் முதல் மொழி தாய் மொழி என்று இருந்தது.

அனைவரும் கல்வி கற்கலாம். தாய் மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்றிருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால், மதராஸ் மாகாணம் இருந்தபோது பல்வேறு மொழிகள் பேசப்பட்டன. பல்வேறு மொழிகள் பேசுபவர்கள் ஒரே மாகாணத்தின்கீழ் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவில், மதராஸ்மாகாணம், பாம்பே மாகாணம், கல்கத்தா மாகாணம் ஆகிய 3 மாகாணங்கள் இருந்தன.

பல்கலைக்கழகமாகட்டும், உயர் நீதிமன்றமாகட்டும், அதுபோன்ற முக்கிய அமைப்புகள் அனைத்தும் அந்த மாகாணங்களில்தான் அமைக்கப்பட்டன. அப்போது தமிழ் பேச, படிக்கத் தெரியாத பலர், பிரெஞ்சு மொழியை, இந்தி மொழியை எடுத்துப் படித்தனர். அதற்குக் காரணம், அந்த மொழிகளை கற்பிக்க ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். ஆனாலும்கூட, 90 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்பதற்காகத்தான். மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், நான்தான் இதைப்பற்றி சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினேன். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகன் அவர்கள்தான் பொறுப்பு வகித்தார். முதல் மொழி தமிழ் மொழிதான். தமிழை அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டும். ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்கள் இருந்தாலும்கூட, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. போன்ற பள்ளிகளாக இருந்தாலும்கூட தமிழை கட்டாயமாக படிக்க வேண்டுமென்று சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், வெளிமாநிலத்திலிருந்து I.A.S., I.P.S. போன்ற பணிகளுக்காக தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்தவர்கள் ஓர் ஆண்டிற்குள் தமிழில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறு இடர்பாடு ஏற்பட்டால்கூட அதை WhatsApp மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தால், அது என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு உடனடியாக அதைத் தீர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டு, ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நடைமுறைகள் என்னவென்றே தெரியாமல் சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர். அதனால், பல சோதனைகள் மற்றும் கஷ்டங்களோடு வசிக்கிறார்கள். அவர்களுக்காகவும், ஏதோ ஒரு காரணத்தால் வெளிநாட்டில் வசிப்பவர் இறந்துவிட்டால், அவர்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்வதற்காகவும் அயலக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அயலக அணியில் ஆங்காங்குள்ள தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்கள்கூட அயலக அணியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிப்பதற்கென்று உங்களுக்கு என்ன வசதி தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் செய்து கொடுப்பதற்கும், software மூலமாக படிப்பதற்கான வசதியையும், online மூலமாக படிக்கும் வசதியையும் செய்து கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ்வழிப் பள்ளிகளிலும், பள்ளிக்கு ஒரு வகுப்பறையில் smart class room வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரிலிருந்துகூட தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். டெல்லி செல்லும்போது ஒரு பள்ளியை பார்வையிட்டு வந்த முதலமைச்சர் அவர்கள், பின்னர் அந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இராதாபுரத்தில் என்னுடைய தொகுதியில் 310- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் smart class room வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த தரமான கல்வியை கொடுக்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இராதாபுரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது.Software-க்கு என தனி வரலாறே உண்டு. 1996 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பம் என்றால் அனைவருக்கும் பெங்களூரு மட்டும்தான் தெரியும்.

1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்களும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக முரசொலி மாறன் அவர்களும் பொறுப்பு வகித்தபோது, சென்னையில் டைடல் பார்க் மற்றும் சிறுசேரியில் தகவல் தொழில் நுட்ப பூங்காவும் தொடங்கப்பட்டன. இப்போது, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 2 இலட்சம் பேர் படித்து, பட்டம் பெற்று வேலைவாய்ப்பையும் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் முன்பு ஆங்கில மொழி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே படிக்க முடிந்தது. திராவிடம் என்றால் என்னவென்று கேட்டார்கள் அல்லவா, திராவிடம்தான் சமூக நீதியைக் கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னது. என்னுடைய தேசம் இந்தியா. அதுதான் எனக்கு அடையாளம். அதை இல்லையென்று ஒருபோதும் நான் மறுக்கப்போவதில்லை.

என்னுடைய மாநிலம் தமிழ்நாடு. என்னுடைய மொழி தமிழ்மொழி. மொழியை அழித்தால் அனைத்து அழிந்துவிடும். அது அழிந்துவிடக்கூடாது என்று பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், காமராஜர் போன்றோர், மொழியை பாதுகாத்ததால்தான் தமிழன் என்று இன்றுவரையில் நாம் அழைக்கப்பட்டு வருகிறோம். அவர்கள் அன்று அந்த முயற்சியை எடுக்கவில்லையென்றால், இன்று நாம் வளர்ந்திருக்க முடியாது. பாராளுமன்றத்தில், ஒரு சிலர் பேசும்போது, மிக அதிகளவிலான நபர்கள் இந்திதான் பேசுவார்கள் என்றும் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே தமிழ் பேசுவார்கள் என்றும் சொன்னார்கள். அடுத்த நிமிடமே, பேரறிஞர் அண்ணா அவர்கள், இந்தியாவிலேயே காக்கைகள் மிக அதிக எண்ணிக்கையிலான பறவையாக இருந்தாலும்கூட, மயிலை தான் நாம் தேசிய பறவையாக வைத்துள்ளோமோ தவிர, காக்கையை அல்ல என்று கூறினார். அது எவ்வளவு பெரிய ஞானமான வார்த்தை.

நெதர்லாந்தில் பிறந்து, இலண்டனில் படித்து, இந்தியாவிற்கு வந்து, தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், இடையங்குடியில் வாழ்ந்து மறைந்த ஐயா கால்டுவெல் அவர்கள், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 18 மொழிகளை கற்றார். அவற்றை ஒப்பிட்டு, முதலில் தோன்றிய மொழி தமிழ் என்று அவர்தான் குறிப்பிட்டார். அதற்குமுன்பு சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் தோன்றியது என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருந்தார்கள். அது மாயை, அது உண்மையல்ல, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரே மொழி தமிழ்மொழிதான். தமிழ் மொழி திராவிட மொழியாகும். இதிலிருந்து தோன்றியதுதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள். ஆகவே, இந்தியாவில் உள்ள எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை தமிழுக்குத்தான் கிடைத்தது. செம்மொழி அந்தஸ்து தமிழுக்குதான் கிடைத்தது. உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகளில் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மொழி எதுவென்றால் அது தமிழ் மொழிதான் என்று ஒப்பிலக்கணம் தந்தவரும் ஐயா கால்டுவெல் அவர்கள்தான். அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு படிப்பில், வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் அல்லாடி கிருஷ்ணசாமியும் இருந்தார். அவர், கணவனை இழந்த செண்பகம் என்ற ஒரு பெண்மணிக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை கோரினார். அந்தப் பெண்மணி, விண்ணப்பம் சமர்ப்பிக்கவே இல்லை என்று குறிப்பிட்டு, அப்போதைய அரசு இடம் கொடுப்பதற்கு மறுத்தது. வழக்கு நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டுமென்ற இன்னொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கீழமை நீதிமன்றம் இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது. வழக்கு, உச்ச நீதிமன்றம் சென்றது.

10 சதவிகித இட ஒதுக்கீட்டை இரத்து செய்ததில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தந்தை பெரியார்தான் முதன்முதலாக குரல் கொடுத்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீட்டை எவ்வாறு இரத்து செய்யலாம் என்று கூறி, புரட்சியை ஆரம்பித்தார். பெரியாரோடு, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் கடுமையாக போராடினார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் இட ஒதுக்கீடு குறித்து அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்றதையடுத்து, 1951 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டிற்காக திருத்தம் செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டதற்குக் காரணம் தமிழ்நாடுதான். தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக, தனித் தீர்மானம் கொண்டுவர பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தமிழக அரசிடம் நிதி உதவி கோரினால், அதனை அளிப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அதேபோன்று, திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து, உரிய அனுமதி பெற்று, எங்களிடம் தெரிவித்தால், முதல்வர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு சென்று தமிழக அரசின் செலவிலேயே சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா காலத்தில் முதலமைச்சர் அவர்கள் டி.ஆர். பாலு அவர்களுடைய தலைமையில் குழு அமைத்து, வெளிநாடுகளிலிருந்து அதிக தமிழர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டார்கள். அவர், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், உலகிலுள்ள தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் நீங்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இங்குவரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டுமென்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு, இந்திய உணர்வு, தமிழர் உணர்வு, திராவிட உணர்வு, சமூக நீதி உணர்வு 100 சதவிகிதம் இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்மீது, தமிழர்மீது அக்கறையோடு வந்திருக்கின்ற உங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories