ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதோடு மட்டுமன்றி ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா விரைவில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் கட்டுமானங்கள் மீது ரஷ்யா பிரமாண்ட ஏவுகனை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் கீவ், சபோரிஜியா, க்ரிவி ரிஹ் மற்றும் பல உக்ரைனிய நகரங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.ரஷ்யாவின் இந்த தாக்குதலில் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எனினும் ரஷ்யா சார்பில் ஏவப்பட்ட ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சார்பில் ஏவப்பட்ட ஏவுகணைகள் உக்ரைனின் மின்கட்டுமானத்தில் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து உக்ரைனின் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.