இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
காசாவை இஸ்ரேல் முற்றிலும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு போதிய அளவு உணவு, தண்ணீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.இதனால் உணவு, குடிநீர் கிடைக்கும் இடத்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐ.நா மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அளிக்கும் உணவு, குடிநீரை பெற்று வருகின்றனர்.
ஆனால் அதற்கும் இஸ்ரேல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், காசாவில் இருக்கும் 2 மில்லியன் பொதுமக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும் அங்கு மனிதாபிமான உதவியை தடுப்பது நியாயமானதுதான் என இஸ்ரேல் அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் அமைச்சர் பெஜலெல் ஸ்மோட்ரிச், "இஸ்ரேலிய பணயக்கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை, காசாவில் இருக்கும் 2 மில்லியன் பொதுமக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும், காசா பகுதிக்கு மனிதாபிமான உதவியை தடுப்பது நியாயமானதுதான். ஆனால், சர்வதேச சமூகம் அதை அனுமதிக்காது என்பதாலேயே மட்டுமே காசாவுக்கான உதவிகளை அனுமதிக்கிறோம்" என்று கூறியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.