பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்ற பங்களாதேஷ் நாட்டில் சுதந்திரத்தில் இருந்தே அவாமி லீக் கட்சி பெரிய கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷைக் ஹசினா இருந்து வருகிறார்.
2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற அவர், அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில், வங்கதேச வன்முறை காரணமாக ஷைக் ஹசினா பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 180க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்ற நிலையில், ராணுவம் ஆட்சியமைக்கும் என ராணுவ தளபதி ஊடகங்களில் தோன்றி விளக்கமளித்தார். இதனிடையே திடீர் திருப்பமாக வங்கதேசத்தில் ராணுவத்தின் உதவியுடன் அந்நாட்டு எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவார் என கூறி தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர்கள் வெற்றிப்பேரணி நடத்தி வருகின்றனர்.