இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இதுவரை 70 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பான Reporters Without Borders அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் " இஸ்ரேல் அரசு ஊடகவியலாளர்களை பாதுகாக்கவேண்டும், ஆனால், அந்த அரசின் தாக்குதலில் பலர் உயிரை இழந்துள்ளனர்.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 50 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 70 ஊடக பணியாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளனர். பல்வேறு சர்வதேச பத்திரிகை நிபுணர்கள் காஸாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பத்திரிகைத் துறையும் அழிக்கப்பட்டுவருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.