இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.
இதனால் கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசத்துடன் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையும் மக்கள் கைப்பற்றினர்.
இதனை அடுத்து கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போது இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இலங்கை அரசு செய்துகொடுக்காத நிலையில், ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு வராததால் இலங்கையில் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பல ஆயிரம் இலங்கை பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக ஒருசில ரயில்கள் மட்டுமே இயங்கிவரும் நிலையில், அதன் கூரை மீது பயணிகள் பயணிக்கும் அளவு நிலை மோசமாகியுள்ளது.
அப்படி ரயில் கூரை மீது பயணித்த ஒருவர் பாலம் ஒன்றின்மீது மோதி உயிரிழந்தார். அதோடு ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் இந்த போராட்டம் அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரயில் ஓட்டுனர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், இலங்கை அரசு ராணுவத்தை களமிறக்கி உள்ளது.
இந்த போராட்டத்தில் வேலைக்கு செல்லும் ஒருசில ரயில் ஓட்டுநர்கள் தாக்கப்படுவதாகவும், போராட்டத்தில் அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், அதனை தடுக்கும் வகையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.