பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் அருகே கடந்த செவ்வாயன்று நஹேல் என்ற 17 வயது சிறுவன் சாலை விதிகளை மீறியதாகக் கூறி போலிஸார் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குண்டுகள் பாய்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன்னுடைய தாய்க்கு ஒரே மகனான நஹேல் வடஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவர் அல்ஜீரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவராவார். நஹேல், டேக் அவே டெலிவரி டிரைவராக (takeaway delivery driver) பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில் நஹேலின் தாயார், “நான் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறவில்லை. என் மகனின் உயிரைப் பறித்த அந்த ஒரு நபரை மட்டும்தான் குறிப்பிடுகிறேன். அந்த நபர் ஓர் அரபு முகத்தைப் பார்த்தார், உயிரைப் பறிக்க நினைத்தார்” என்று வேதனையோடு கூறினார்.
நஹேல் தாயாரின் பேட்டி மற்றும் நஹேலைச் சுடும் வீடியோ சமூக வலை தளங்களில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அடுத்த சில மணிநேரங்களில் இனபாகுபாடு காரணமாக நஹேல் சுட்டுக்கொல்லப்பட்டார் என செய்திகள் பரவி, நஹேல் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் போராட்டம் ஈடுபட்டனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் கடைகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தொடக்கத்தில் பாரீஸ் வட்டத்திற்குள் கலவரம் அரங்கேறிய நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான லியோன் மற்றும் மார்செய்ல்லி, டவ்லவ்ஸ், ஸ்ட்ராஸ்போர்க், லில்லி போன்ற முக்கிய நகரங்களுக்கும் கொந்தளிப்பு பரவியுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த சுமார் 45,000 காவல்துறை அதிகாரிகள் பிரான்சின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1,100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றுடன் 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது.