அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாஷ் என்ற நகரில் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அங்கு விரைந்தனர். அங்கே சென்று பார்க்கையில் சீசர் ஒலால்டே (Cesar Olalde) என்ற 18 வயது இளைஞர், தனது குடும்பத்தினர் வீட்டில் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
உடனே அங்கு சென்று பார்க்கையில், குடும்பத்தினர் அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில் அந்த சடலங்கள் சீசரின் பெற்றோர் ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவருடைய சகோதரி லிஸ்பெட் ஒலால்டே, தம்பி ஆலிவர் ஒலால்டே ஆகியோருடையது என்று தெரியவந்தது.
இதையடுத்து சீடரிடம் விசாரிக்கையில் அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது தனது குடும்பத்தை தானே கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். மேலும் கொலைக்கான காரணத்தையும் கூறினார். அதாவது சீசரின் குடும்பம் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும், தன்னையும் கொலை செய்து சாப்பிட முயர்சித்தனர் என்றும், அதன் காரணமாகவே தான் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர் உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கருதி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள போலீசார் முயற்சித்து வருகின்றனர். எனினும் அவர் கூறியது எந்த அளவு உண்மை என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது குடும்பத்தினர் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் தன்னை கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் குடும்பத்தை கொன்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.