சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் அங்குள்ள கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியின் உணவுத்துறையில் ஆய்வாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த திங்கள் கிழமை அன்று கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார்.
அங்கு சென்று அந்த நீர்த்தேக்கத்தை கண்டுரசித்தவர் அங்கு தண்ணீருக்கு அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது அவரின் 1 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மொபைல் போன் ஒன்று தவறி 15 அடி ஆழ நீருக்குள் விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.
அதன்படி அங்குள்ளவர்கள் நீரில் குதித்து மொபைல் போனை தேடியும் கிடைகாத நிலையில் அரசு அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அந்த நீர் தேக்கத்தில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்றியுள்ளார்.
அதன்பின்னர் அவரின் மொபைல் போன் கிடைத்த நிலையில், ஆனால் அது வேலைசெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த நீர்த்தேக்கத்தில் 15 அடியாக இருந்த நீரின் அளவு வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. அந்த மோட்டார் பைப் மூலம் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இது உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சர்ச்சை அதிகாரி ராஜேஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் அமராஜித் பகத் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.