அம்பானியுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால் தடை செய்யப்பட்ட சீன நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுறுவலை அடுத்து இந்தியாவில் பிரபலமாக இயக்கப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, லூடோ போன்ற 118 மற்றும் 59 என சீன செயலிகளுக்கு ஒன்றிய மோடி அரசு தடை விதித்து சீனாவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.
அதன்பின்னர் அந்த மோதல் தீவிரம் அடைந்ததும், அலிபாபா, அலி சப்ளையர்ஸ், அலி பே, ஸ்னாக் வீடியோ, கேம்கார்டு மற்று டேட்டிங் செயலிகள் என 43 செயலிகளை இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் பயன்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்டு அரசாணை வெளியானது.
அந்த வகையில் உலகின் தலைசிறந்த ஃபேஷன் பிராண்டுகளில் ஒன்றான ஷீன் நிறுவனத்தின் செயலுக்கும் ஒன்றிய அரசு தடை விதித்தது. அதன்படி ஷீன் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையையும் முழுமையாக நிறுத்திக்கொண்டது.
இந்த நிலையில், ஷீன் நிறுவனம் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் நாட்டிற்குள் நுழைவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷீன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் பரந்துபட்ட ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், இதனால் அந்த நிறுவனத்துக்கும் இந்திய சந்தையின் கதவுகளை திறக்க ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டதாகவும் முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.