பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.
இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்து வருகிறார். எனினும் தொடர்ந்து பிரதமர்கள் அங்கு மாறிவரும் நிலையில் மக்களிடையே ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நம்பிக்கை இழந்து வருவதாக தொடர்ந்து அங்கு கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரிஷி சுனக்கின் பயணத்துக்கு மட்டுமே 15 நாட்களில் ரூ.5 கோடி செலவிடப்பட்டதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தெடர்பாக 'தி மிரர்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ரிஷி சுனக் கடந்த ஆண்டு எகிப்து, பாலி, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணங்களுக்கு பயண கட்டணமாக ரூ.4.56 கோடி விமான நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் விமான வாடகைக்கு ரூ.96 லட்சமும், தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ.3 லட்சமும், G20 உச்சிமாநாட்டிற்கு சென்றபோது ரூ.3 கோடி செலவும், இதர செலவுகளுக்காக ரூ.99 லட்சம் என 5 கோடி வரை செலவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசின் ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கிவரும் நிலையில், பயண செலவாக 15 நாட்களுக்கு 5 ரூ.கோடி அளவு செலவாகியுள்ளது அந்த நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.