பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதன் பின்னர் சமீபத்தில் தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ மற்றும் போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
வேண்டுமென்றால் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை(FSSAI) அறிவுறுத்தியுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வேறு வழியின்றி தனது உத்தரவை ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை திரும்பப்பெற்றது.
இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் வழக்கத்துக்கு மாறாக இந்தி தெரிந்த ஓட்டுனர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு மீண்டும் இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கிடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு
கண்டிக்கத்தக்கது.உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க.
வந்தே பாரத் ரயிலா?
வந்தே "இந்தி" ரயிலா?
சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு" எனக் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் இது போன்ற தொடர் இந்தி திணிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.