உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அண்ட் அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது/.
20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில நாட்களுக்கு முன்னர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி கமீலா ராணியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக பிரிட்டனின் ராணி இந்தியாவில் இருந்து பிரிட்டனால் கொண்டுசெல்லப்பட்ட கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ள கிரீடத்தை அணிவார். ஆனால் கமீலா ராணியான பின்னர் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணியமாட்டார் என்றும் ராணி மேரியின் கிரீடத்தை அணிவார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ள கிரீடம் லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கிடைத்த வைரலாக அறியப்படும் கோஹினூர் வைரம் முகலாய பேரரசர்கள், ஈரான் `ஷா`க்கள், ஆப்கானிஸ்தான் மன்னர்கள், சீக்கிய மகாராஜாக்கள் ஆகியோர் வசம் இருந்தது.
பின்னர் 1849ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலோ-சீக்கிய போரில் கிழக்கு இந்திய கம்பெனியின் வெற்றிக்கு பின்னர் கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு விக்டோரியா மகாராணியிடம் அளிக்கப்பட்டது. அதுமுதல் கோஹினூர் வைரம் அங்கேயே இருந்து வருகிறது.இந்த வைரத்தைத் தங்களிடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான், இரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன என்பதும், ஆனால் இதற்கு பிரிட்டன் அரசு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.