ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி தொடங்கி நாம் பல்வேறு காதல் காவிய கதைகளைக் கேட்டும் பார்த்தும் இருப்போம். அதேபோல் 'காதலுக்கு கண் இல்லை' என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். அப்படியாகப் பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடந்த காதல் திருமணம் தற்போது வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் லியாகத் அலி. 70 வயது முதியவரான இவர் 19 வயதுஷுமைலா அலி என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்றால் நாம் ஏன் ஆச்சரியப்படாமல் இருப்போம். அதுவும் இந்த கதையைக் கேட்டாலே கட்டாயம் 90 கிட்ஸ்கள் கடுப்பாகாமளா இருப்பார்கள்.
இவர்கள் இருவரும் லாகூரில் காலையில் நடைபயிற்சி செய்தபோதுதான் அறிமுகமாகியுள்ளனர். பிறகு இருவரும் காலையில் சேர்ந்தே தினமும் நடைப்பயிற்சி சென்று வந்தனர். இப்படி நாட்கள் நகர்த்து கொண்டிருக்க முதலில் காதல் என்ற வலையை வீசியது லியாகத் அலிதான்.
நடைப்பயிற்சியின் போது ஷுமைலா அலியை கவரப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இதுவே இருவரும் காதல் ஏற்படுவதற்கான துவக்கமாக இருந்துள்ளது. இதையடுத்து தனது விருப்பத்தை ஷுமைலா அலி வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. 49 வயது வித்தியாசம் உடையவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க முடியாது என பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர்.
ஆனால் கடைசியில் அனைவரையும் சமாதானம் செய்து காதலித்த லியாகத் அலியையே திருமணம் செய்துள்ளார் ஷுமைலா அலி. இந்த திருமணம் குறித்துப் பேசிய ஷுமைலா அலி, 'காதலில் வயது பார்க்க முடியாது' என தெரிவித்துள்ளார். அதேபோல் லியாகத் அலி, ' காதல் விஷயத்தில் வயது ஒரு காரணி அல்ல. மனைவியின் சமையலால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் எவரும் திருமணம் செய்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.