காலநிலை மாற்றம் உலககளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் படி நியூஸிலாந்து எடுக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
ஓசியானிய நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் அங்கு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. அங்கு சுமார் 1 கோடி மாடுகளும் இரண்டரை கோடி ஆடுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மூலாதாரமாக இந்த கால்நடை வளர்ப்பு இருக்கிறது.
ஆனால், இந்த கால்நடைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி சுற்றுசூழலை பாதிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க நியூஸிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.
அதேநேரம் இந்த வரிவிதிப்புக்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் விவசாயிகள் இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவை 2030 வாக்கில் 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் குறைக்க நியூஸிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.