இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகியுள்ளார்.
இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், இந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்தது. பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் அதிகரிக்கத் தொடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள், எதிர்கட்சிகளை தவிர சொந்த கட்சிக்குள்ளும் எதிர்ப்புகளை சந்தித்தார். பல எம்.பிக்கள் தேர்தலில் லிஸ் ட்ரஸை தேர்ந்தெடுத்ததற்க்காக வருத்தம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லிஸ் ட்ரஸ், "என்னுடைய தவறான பொருளாதார கொள்கையால்தான், நாட்டின் பொருளாதாரம் சிக்கலைச் சந்தித்து வருகிறது. நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த தவறுகளுக்காக நான் வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் " கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து மன்னர் சார்லஸிடம் பேசியுள்ளேன். அடுத்த வாரத்திற்குள் கட்சி தலைமைத் தேர்தல் நடத்தப்படும்." என்று கூறினார்.
அடுத்த தேர்தலில் கடந்த முறை தோல்வியைத் தழுவிய இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றிபெற்று அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.