இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அந்த போராட்டம் உச்சம் அடைந்த நிலையில், பொதுமக்கள் கும்பலாக வந்து அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து நாட்டில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பிச்சென்ற நிலையில் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிபர் மாளிகையில் இருந்து பொதுமக்கள் இன்னும் வெளியேறவில்லை. அது பொதுமக்களின் சுற்றுலா தளமாக தற்போது விளங்கிவருகிறது.
இந்த நிலையில், மதுஹான்சி ஹசிந்தாரா என்ற பெண் ஒருவர் அதிபர் மாளிகையில் போட்டோ சூட் நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வித்தியாசமான போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த பதிவின் கீழ் பலர் அவரை பாராட்டி பதிவிட்டாலும் சிலர் இது போராட்டத்தையும், போராடிய மக்களையும் கொச்சை படுத்துவதைப்போல இருப்பதாகவும் கூறியுள்ளனர்.