சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் சொகுசு கப்பலில் வேலை வாங்கிக் தரப்படும் என்ற தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து வினோத் நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராஜா, அவரது உதவியாளர் திவ்யபாரதி ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே வேலை வாங்கிக் தரப்படும் என கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை நம்பிய வினோத் அவர்களது வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. அது குறித்து அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் அவரை மிரட்டி வந்துள்ளனர்.
பிறகு, வினோத் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட ராஜா மற்றும் திவ்யபாரதியை கைத செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் வினோத்தைப் போன்றே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 43 பேரிடம் ஏமாற்றி ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் பண மோசடி செய்துள்ள தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.