க்யுஉக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரால் இரு நாடுகளைச் சேர்ந்த ஏராளாமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களிலும் பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதனிடையே லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
தினமும் உக்ரைனில் இருந்து வெளியேறிய மோசமான நிலைமை குறித்து அந்நாட்டு மக்கள் தெரிவித்து வருவது இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் அழகியின் பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் வெரோனிகா டிடுசேன்கோ. இவர் கடந்த 2018ல் அந்நாட்டு அழகியாகத் தேர்வானவர். பின்னர் மாடலாகி விளம்பரங்களில் நடித்து வந்த வெரோனிகா தனது 7 வயது மகனுடன் உக்ரைனின் தலைநகர் கீவில் வசித்து வந்தார்.
போர் அறிவிக்கப்பட்டதால், தங்களின் சொந்த வீட்டை விட்டு உக்ரைனில் இருந்து வெளியேறிய நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெண்கள் உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் என்பவருடன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய வெரோனிகா, “கடந்த 24ஆம் தேதி கீவில் வெடிகுண்டு சத்தம் கேட்டுதான் கண்விழித்தோம். பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் திணறிக்கொண்டிருந்த வேளையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டுகள் வீசப்பட்டது. உயிருக்கு அஞ்சி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நகரத்தை விட்டு வெளியே வீதிகளில் நடக்கத் தொடங்கின.
வழிநேடுக பல மணிநேரம் போக்குவரத்து இருந்தது. எங்கள் தலைக்கு மேலே ஏராளமான ரஷ்ய ராணுவ விமானங்கள் பறந்தபடி குண்டுகளை வீசிச் சென்றது. என் வாழ்நாளில் வான் தாக்குதலை முதல் முறையாக அன்றுதான் பார்த்தேன். எனது 7 வயது மகனுடன் இந்த பயணத்தை மேற்கொள்ளும் போது, பயமாக இருந்தது. அதனை நினைக்கும்போது என் இதயம் உடைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.