உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்.
10 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போரால் இரு நாட்டைச் சேர்ந்த ஏராளாமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இருநாடுகளிடையே நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களை முன்கூட்டியே இந்தியா அழைத்து வருவதற்கு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. தேர்தல் பிரச்சாரத்திலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
இது நாடு முழுவதும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானதற்கு பின்பே, ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில், மீட்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிற்குச் சென்றார். அவ்வாறு சென்ற இடத்தில் தான், ருமேனிய மேயருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உக்ரைனிலிருந்து சாலைமார்க்கமாக வெளியேறி ருமேனியாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களுக்கு, இவ்வளவு நாளும் அங்குள்ள மேயர்தான், அவர்கள் கூடவே இருந்து தேவையான வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.
இதனிடையே, மாணவர்களை அழைத்துச் செல்ல இந்தியாவிலிருந்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வந்திருப்பதையொட்டி, தன்னால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மாணவர்களிடம், “அவர்கள் எப்போது இந்தியா செல்வார்கள்.. அதற்கான முன்னேற்பாடுகள் என்ன?” என்பது குறித்தெல்லாம் விளக்கியுள்ளார்.
அப்போதுதான், ஜோதிராதித்ய சிந்தியா குறுக்கிட்டு “எங்களின் மாணவர்களிடம் நீங்கள் என்ன பேசுவது? நான்தான் பேசுவேன்.. நான்தான் விவரங்களை கூறுவேன்..” என்று அடம்பிடித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த ருமேனிய மேயரும், “இந்த மாணவர்களை நான்தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். நீங்கள் அல்ல.. அப்படிப்பட்ட நான் பேசக்கூடாது என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது.. பொய் பேசாதீங்க.. உண்மையை சொல்லுங்க” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மாணவர்களும் அவரது பேச்சை வரவேற்றுக் கைதட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது.