1976 மற்றும் 1977 ஆண்டுகளில் அமெரிக்காவை அலற விட்டவன் டேவிட் பெர்கோவிட்ச். இரவு நேரங்களில் கார்களிலும் காதலருடனும் தோழிகளுடனும் தென்படும் பெண்களை சுட்டுக் கொலை செய்து கொண்டிருந்தான். 6 பேர் அவனுடைய துப்பாக்கிக்கு பலியாகி இருந்தனர். ஒருவழியாய் அவன் கைது செய்யப்பட்டபிறகுதான் மன ஆரோக்கியத்துக்கும் குற்ற மனப்பான்மைக்கும் உள்ள தொடர்பு புலப்பட்டது.
1953ஆம் ஆண்டில் பிறந்தவன் பெர்கோவிட்ச். தாயின் பெயர் பெட்டி ப்ரோடர். தந்தையின் பெயர் ஜோசப் க்லெய்ன்மேன். அவர் வேறொருவரை திருமணம் செய்திருந்தார். கள்ள உறவில் பிறந்தவன் டேவிட் பெர்கோவிட்ச். அவனது பிறப்புக்கு பிறகு தாய் வேறொருவனை மணம் முடித்துக் கொண்டார். பிறந்த ஒரு வார காலத்தில்யே பெர்கோவிட்ச் அநாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டான். நேதன் மற்றும் பேர்ல் பெர்கோவிட்ஸ் என்கிற தம்பதியர் டேவிட்டை எடுத்து வளர்த்தனர். சிறு வயதிலேயே டேவிட்டின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. உயரமாகவும் குண்டாகவும் இருந்தான். அதனால் பலரின் கேலிப் பேச்சுக்கும் ஆளாகினான். வளர்ப்பு பெற்றோரோல் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு துடிப்பாக இருந்தான்.
இளம் வயதிலிருந்தே பெண்கள் மீது ஆண்கள் கொள்ளும் அதிகாரத்தை கண்டு வளர்ந்திருக்கிறான். 12 வயதாக தொடங்குகையில் சமூக விரோத செயல்கள் செய்யத் தொடங்கினான் பெர்கோவிட்ச். தீ வைக்கும் வேலைகளை தொடங்கினான். சிறு உயிர்களை கொன்று பழகினான். 14ஆம் வயதில் வளர்ப்புத் தாய் புற்றுநோயால் இறந்துபோனார். பெர்கோவிட்ச்சுக்கான சீரழிவு தீவிரமாகத் தொடங்கியது. படிப்பில் கவனமிழந்தான். அதிகமாக சமூகவிரோத செயல்களுக்குள் ஈடுபட்டான்.
18ஆம் வயதில் அமெரிக்க ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தான். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மனநிலை வாய்த்த பெர்க்கோவிட்ச்சுக்கு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பை ராணுவம் கொடுத்தது. போதை மருந்துக்கும் அடிமையானான். 21ஆம் வயதில் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அச்சமயத்தில் சில முக்கியமான விஷயங்கள் அவன் வாழ்வில் நடந்தன.
முதலாவதாக பெர்கோவிட்ச்சை ஒரு நாய் கடித்தது. எதிர்பாராத விதத்தில் நேர்ந்த விபத்துதான் எனினும் நாயைப் பற்றிய பயமும் கற்பனையும் அப்போதிலிருந்து அவனுக்குள் தொடங்கியது. அடுத்ததாக அவனது உண்மையான தாயை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முதன்முறையாக பெர்கோவிட்ச்சுக்கு தான் பிறந்த விதம் தெரிய வந்தது. தாய் தன்னை புறக்கணித்த விஷயமும் தெரியவந்தது. பிறகு அவன் தாயை பார்க்கவேயில்லை.
பணிபுரிந்த விமான நிலைய வேலையிலிருந்தும் டேவிட் பெர்கோவிட்ச் விலகினான். அதற்கு அவன் சொன்ன காரணம், அவனுக்கு நாயின் குரல்கள் கேட்கின்றன என்பதுதான். யாரும் அவனுடன் இல்லாததால் அவனது நிலையை யாரும் கவனிக்கவும் முடியவில்லை. தனிமையிலேயே பொழுதைக் கழித்தான். பெரும் மன அழுத்தத்தில் இருந்தான். அங்குமிங்கும் என அலைபாய்ந்து அவன் மனம் ஒரு கட்டத்தில் அமைதி அடைந்தது. அவனுடைய குழப்பங்கள் யாவும் களைந்து பெண்களைக் கொல்வதற்கென துப்பாக்கியை கையில் கொடுத்தது. தொடர் கொலைகளைத் தொடங்கினான்.
நாய் கொல்ல சொன்னதாக தொடர்ந்து பெர்கோவிட்ச் கூறிக் கொண்டிருந்ததால் பல மனோவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவன் மனோரீதியான பாதிப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோதும் அவன் அமைதியாகவே இருந்தான். ஒருமுறை மட்டும் யாரும் எதிர்பார்க்காத விஷயம் ஒன்று நடந்தது.
ஏழாவது மாடியின் ஜன்னலின் வழியே வெளியே குதிக்க முயன்றான். காவலர்கள் அவனைத் தடுத்து அமர வைத்தனர். அவன் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தான். ‘அவர்கள் எல்லாரையும் நான் கொலை செய்வேன்!’ என உச்சரித்துக் கொண்டிருந்தான். மீண்டும் அவன் மனநிலை பரிசோதிக்கப்பட்டது. எந்தவித மாற்றமுமில்லை. விசாரணை தொடர்ந்தது. 1978ம் ஆண்டின் ஜூன் 12ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டது. அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தலா 25 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மனநிலை என்பது எவரொருவரின் தனிப்பட்ட விஷயமும் அல்ல. சிறு குழந்தை தொடங்கி பெரியவர் வரை அவரை சுற்றி இருக்கும் அனைவரும் விதைக்கும் விஷயங்களே மனமாக வளர்கிறது. பல எதிர்பார்ப்புகளை அது முன்வைக்கிறது. பல நேரங்களில் அது ஏமாறுகிறது. நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் சொல்ல மறந்த ஒரே விஷயம், நாம் தோல்வி அடைகையில் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். வெற்றிகளே வாழ்க்கை என போதிக்கப்படும் உலகில் அதிக தோல்விகளும் சில வெற்றிகளும் மட்டுமே யதார்த்தம். தோற்பவரையும் உள்ளடக்காத சமூகத்தில் அவர்கள் சென்று சேரும் இடங்கள் சமூகத்துக்கு ஒவ்வாத இடங்களாகவே இருக்கின்றன.
டேவிட் பெர்கோவிட்ச்சை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர் டேவிட் ஆப்ரம்சன் அவனது மனநிலையை இப்படி குறிப்பிடுகிறார்:
”கொலைக்கான உத்தரவுகள் எங்கிருந்தோ கிடைத்ததாக அவன் சொல்வது என்னை பொறுத்தவரை அவனது கண்டுபிடிப்பு மட்டுமே. அடக்கப்பட்ட அவனது பாலுறவு இச்சைகளிடமிருந்துதான் அவனுக்கு அந்த உத்தரவுகள் வந்திருக்கின்றன. பெண்களை பார்த்து அவன் அஞ்சியிருக்கிறான். அவர்கள் அவனை கிண்டல் செய்வார்களோ என எண்ணியிருக்கிறான். அவர்களை பாலுறவு ரீதியாக அணுக அவன் பயந்திருக்கிறான். பெண்கள் மீது பயம் கிடையாது என அவனுக்கு அவனே பொய்யாக சொல்லிக் கொள்ள வலிமையானவனாக அவனை காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அவனுடைய துப்பாக்கி அதற்கு தீர்வை கொடுத்தது. பெண்களை அணுகாமல், அவர்களை தொடக் கூட செய்யாமல், அவர்கள் மீதான அவனது அதிகாரத்தை துப்பாக்கி கொண்டு அடைய முடிந்தது.”