இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
வட கொரியாவில் சிரிக்கத் தடை? : கிம் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?
எல்லாவற்றையும் தாண்டி இருக்கும் கேள்வி ஒன்றுதான். கிம் நல்லவரா கெட்டவரா?
எவருக்கும் தெரியாது. ஆனால் நமக்கு ஒரு பதில் கேள்வி இருக்கிறது. அமெரிக்கா நல்ல நாடா கெட்ட நாடா?
இந்த கேள்விக்கான பதிலில்தான் உங்களுக்கான அரசியல் இருக்கிறது. உங்களின் பதில், அமெரிக்காவை நல்ல நாடு என சொன்னால், உங்களுக்கு கிம் கெட்டவர். எண்ணெய்க்காக ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் என உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா கெட்ட நாடு என உங்கள் அரசியல் சொன்னால் கிம்மின் அரசியலை தெரிந்துகொள்ள விரும்புவீர்கள்.
எந்த அமெரிக்கா கிம்மை கொடூரமானவரென சித்தரிக்கிறதோ அந்த அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேர் வட கொரியாவுக்கு சென்று உயிருடன் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் வட கொரியாவையும் கிம்மையும் பற்றியும் சொல்லும் விஷயங்கள் என்ன தெரியுமா?
Jimmy Carter, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி. பில் கிளிண்டன் பதவியில் இருந்த காலத்தில் தன்னிச்சையாக வட கொரியாவுக்கு சென்றார். வடகொரியாவை பற்றியும் இன்றைய கிம்மின் தந்தையைப் பற்றியும் அவர் சொன்ன கருத்து இதுதான்:
”எல்லா மக்களும் வேலை பார்க்கிறார்கள். ஒரு வாரத்தில் 48 மணி நேரத்துக்கு உழைக்கிறார்கள். அலுவல் நேரங்களில் தெருக்களில் மக்களை பார்க்க முடியாது. எல்லாருக்கும் ஏதோவொரு வேலை இருந்தது. அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றேன். வால்மார்ட் போல் இருந்தது. அமெரிக்காவில் ஒரு சனிக்கிழமை பிற்பகலில் கடைக்கு செல்லுமளவுக்கு மக்கள் அங்கு இருந்தார்கள். எல்லாருமே நல்ல நிலையில் இருந்தார்கள். வட கொரியாவின் தலைநகர் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் போல இருந்தது. எங்கு பார்த்தாலும் படங்கள், விளக்குகள் என பரபரப்பாக இருந்தது.”
அடுத்தவர் Dennis Rodman. அமெரிக்காவைச் சேர்ந்தவர். கூடைப்பந்தாட்ட வீரர். ஐந்து முறை வட கொரியா சென்று உயிரோடு திரும்பி வந்திருக்கிறார். ‘வடகொரியால கிம்முன்னு ஒருத்தரு’ என கதை சொல்பவர்களுக்கு வடகொரியாவை பற்றியும் கிம்மை பற்றியும் சொல்ல இவருக்கு பல நேரடி தகவல்கள் இருக்கின்றன.
Dennis-ஐ ஒரு தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தார்கள். பேட்டி எடுத்த பெண், எல்லாரையும் போல் கிம்மை பற்றிய கதைகள் பலவற்றை கேட்டவர். டென்னிஸ் கிம்மை சிறந்த மனிதர் என சொன்னதும் அந்தப் பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே, கிம்மை பற்றி ‘இத்தனை பேரை கொன்றார்.. சொந்த மாமாவை கொன்றார்’ எனக் கேட்ட கதைகளை சொல்கிறார். எல்லாவற்றையும் ஒரேயடியாக மறுத்துவிட்டு டென்னிஸ் சொல்கிறார், ‘அந்த கதைக்கெல்லாம் எதுவும் சாட்சி இல்ல... யாரோ சொன்னத வச்சு நம்ம நம்பிக்கிட்டு இருக்கோம்’ என.
இங்கிலாந்துக்காக வடகொரியா பற்றிய ஒரு தொடரை தயாரிக்க மைக்கெல் பாலின் என்பவர் அங்கு சென்றிருக்கிறார். அவர் இயக்கிய தொடரின் ட்ரெய்லர் காட்சி இது.
இவர்கள்தான் வட கொரிய மக்கள். இதுதான் வடகொரிய நாடு! நாம் கேட்ட கதைகளில் இருப்பதை போல் எங்காவது ஏதேனும் தென்படுகிறதா?
ட்ரம்ப்பின் ஆட்சிகாலத்தில் கிம் ட்ரம்ப்பை சந்தித்தார். இருவரும் சேர்ந்து நடத்திய ஊடகச் சந்திப்பில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. ஊடகத்தை சேர்ந்தவர்கள், ‘அணு ஆயுதங்களை கைவிடுவீர்களா’ எனக் கேட்க, ‘அதையெல்லாம் பேசத்தானே இங்கு வந்திருக்கிறேன்’ என புன்னகைக்கிறார் கிம். மெல்ல அமெரிக்காவின் புத்தியுடன் ட்ரம்ப் ஒரு விஷயத்தை சொல்கிறார். ‘என்னை கேள்வி கேட்கற மாதிரி குரல உயர்த்தியெல்லாம் கேள்வி கேட்காதீங்க’ என்கிறார். அதற்கு கிம், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் அவங்க பேசலையே!’ என ஊடகங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
அவர்தான் கிம்.
வடகொரியாவை பற்றிச் சொல்லவும் விஷயங்கள் இருக்கின்றன.
உலகின் நூறு சதவிகித ஆர்கானிக் உணவு கொண்ட நாடு வடகொரியா. விவசாயத்தை உலகம் முழுவதும் அமெரிக்க பொருளாதாரம் அழித்துக் கொண்டிருக்கையில், வட கொரியாவின் பொருளாதாரம் பெருமளவுக்கு விவசாயத்தை சார்ந்திருக்கிறது. அவசியமற்ற நுகர்வு கலாசாரம் வடகொரியாவில் கிடையாது.
விவசாயம் செய்யும் மக்களை பார்க்கும் அமெரிக்கப் புத்தி கொண்டோருக்கு ஏழை நாடாக வட கொரியா தெரிகிறது. நுகர்வு கலாசாரத்தை புறக்கணிக்கும் வட கொரியா, நுகர்வில் மூழ்கித் திளைப்பவருக்கு மனித உரிமை அற்ற நாடாகவே தெரியும்.
பல்லாண்டுகளாக உலக நாடுகளின் பொருளாதார தடை இருந்தபோதும் வட கொரியாவின் பொருளாதாரம் கிம்மின் தலைமையில் வளர்ந்தே வந்திருக்கிறது. சோசலிச பொருளாதாரம் சீரழிவையே தரும் எனப் பிதற்றும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளின் மக்களுக்கு வட கொரியாவின் வளர்ச்சி வெறுப்பை கொடுக்கும் விஷயம். ஆதலால் அவர்களுக்கு வட கொரியாவை பற்றியும் கிம்மை பற்றியும் அவதூறு பரப்ப வேண்டிய தேவை இருக்கிறது.
உலக நாடுகளையும் உலகத் தலைவர்களையும் கொடூரமாக சித்தரித்து கதைகள் புனையும் அமெரிக்கா அந்த கொடூரங்கள் எதற்கும் கொஞ்சம் கூட சளைத்ததல்ல. அமெரிக்காவின் அரசியல் வரலாறு, உலக நாடுகளின் அப்பாவி மக்கள் சிந்திய ரத்தத்தில் எழுந்த வரலாறு. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், பாலஸ்தீனம் எனப் பல நாடுகளை இன்றளவும் ராணுவம் கொண்டு நாசம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா, எந்த நாட்டுக்கும் ராணுவம் அனுப்பாமல் தன் நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் கிம் ஜோங் உன்னை பற்றி சொல்லும் செய்திகள் கட்டுக்கதைகளாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
அமெரிக்க அரசியலை புரிந்துகொள்ளத் தெரியாதோருக்கு வடகொரியா புரியாது. அமெரிக்கா ஒன்றும் பாட்டியும் அல்ல. வடகொரியா ஒன்றும் காக்கையும் அல்ல. இரண்டும் இரு வேறு நாடுகள். இரு வேறு அரசியல்கள். பாட்டி-காக்கா கதை பாணியிலேயே அந்த அரசியல்களை புரிந்துகொள்ள முயன்றால் நீங்கள்தான் வடை ஆவீர்கள். உங்களை தூக்கிச் செல்வது அமெரிக்காவாக இருக்கும்.