ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்களே வேறு நாட்டிற்குத் தப்பிச்செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வியாழனன்று காபூல் விமானநிலையத்திற்கு வெளியே குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கோராசன் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து எங்குச் சென்றாலும் தேடி வந்து வேட்டையாடுவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்தநாளே ஐ.எஸ்.ஐ.எஸ் கோராசன் அமைப்பின் இருப்பிடத்தில் ட்ரோன் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இதில் இந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இறந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காபூம் விமான நிலையம் வெளியே மீண்டும் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆப்கனில் இன்னும் நிலைமை அபாயகரமானதாக உள்ளது.
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அமெரிக்க ராணுவம், அங்கு இன்னும் 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.