உலகம்

தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் கடும் பதட்டம் : இந்தியர்கள் நிலை என்ன?

ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரை தாலிபான்கள் பிடித்தனர். அதிபர் அஷ்ரப் கானி தஜகிஸ்தானுக்கு தப்பி ஓடினார்.

தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் கடும் பதட்டம் :  இந்தியர்கள் நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க பாதுகாப்புப்படை விலக்கிக்கொள்ளப்படுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா தனது படையினை ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளத் தொடங்கியது. இந்த சூழலில்தான் ஆப்கானின் முக்கிய நகரான கந்தகாரை தாலிபான்கள் கைப்பற்றினர். அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது. கந்தகார் நகரில் வாழ்ந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆப்கனின் முக்கிய நகரான மசர் இ ஷரீஃப் நகரினை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அரச படைகள் தாலிபன்களிடம் தாமாகவே தங்கள் நகரினை விட்டுத் தந்ததாக தகவல்கள் வெளியாயின. இதைப்போன்றே சனிக்கிழமை அன்று பக்திகா மற்றும் குன்வார் மாகாண தலைநகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளன.

அந்நகரத்தில் தேசிய ராணுவம் முதலில் சரணடைந்ததால், மற்ற அரசுக்கு ஆதரவான படைகள் மற்றும் ஆயுதமேந்திய போர் குழுக்கள் சரணடைந்தன. மசர் இ ஷரீஃப் நகரம் ஆப்கனின் ஒரு முக்கிய பொருளாதார மையம் ஆகும். இந்நகரம் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப் புறத்தில் அமைந்திருக்கிறது. 1990-களில் இந்நகரம் தாலிபன்கள் வசம் இருந்தது. இந்த நகரை தாலிபான்கள் கைப்பற்றியதால் அங்குள்ள கடைவீதிகளில் உள்ள நகைக்கடை மற்றும் துணிக்கடை விளம்பரங்களில் பெண்களின் படம்போட்ட விளம்பர போர்டுகளை தாலிபான் ஆதரவாளர்கள் வெள்ளை வர்ணம் பூசி அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு காபூலுக்குள் நுழைந்த தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை தாலிபன்கள் கைப்பற்றிவிட்டனர். அதிபராக் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து போர் முடிந்துவிட்டதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.ஆப்கன் அதிபர் மாளிகையில் புகுந்த தாலிபான்கள் அங்கு உணவு அருந்துவது போன்ற வீடியோ காணொலிகள் வெளியாகி உள்ளன.

தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் கடும் பதட்டம் :  இந்தியர்கள் நிலை என்ன?

இதனால் காபூல் நகரில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. காபூலை நகரை விட்டு பொதுமக்களும், வெளிநாட்டினரும் விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். காபூல் நகரில் எங்கு நோக்கினும் துப்பாக்கி சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளதால் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கவுன்டர்களில் ஊழியர்கள் இல்லை. மக்கள் விமானங்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடுவதாக கூறப்படுகிறது. காபூல் நகரில் வசிக்கும் இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில் ஐக்கிய நாடுகள் சபையில் அவசரக் கூட்டம் கூட உள்ளது.

தாலிபான்கள் காபூல் நகரை முற்றுகையிடத் தொடங்கியதுமே அங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. சூறையாடல் மற்றும் கொள்ளையைத் தடுப்பதற்காக நகருக்குள் நுழைவதாக தாலிபன்கள் அறிவித்தனர். அதற்குள்ளாகவே பல முக்கியப் பகுதிகளை விட்டு அரசுப் படைகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.

தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் கடும் பதட்டம் :  இந்தியர்கள் நிலை என்ன?

காபூலுக்குள் தாலிபன்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியுள்ளது. தஜிகிஸ்தானுக்கு அவர் தப்பியிருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

காபூல் நகரை தாலிபன்கள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தங்கள் உடைமைகளை அப்படியே போட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய ஓட்டம் பிடித்துள்ளனர். காபூல் நகரில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளிலும் பெண்களின் படங்களை தாலிபான்கள் அழித்து வருகின்றனர்.

மக்கள் பணத்தை எடுக்க முற்பட்டதால் நாள் முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. ஏடிஎம் மையங்கள் நிரம்பியிருக்கின்றன. பெரிய சண்டை எதுவும் இல்லாமல் காபூல் நகரை தாலிபான்கள் கைப்பற்றி இருந்தாலும், அடுத்து என்ன செய்வார்கள் என்பது குறித்த பீதி மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் கடும் பதட்டமான சூழலில் அங்கு நிலவி வருகிறது.

‘இதனிடையே தலிபான்களால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், தனது தூதரகத்தை மூடுவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ஆப்கானின் உள்கட்டமைப்புக்காக நிதியுதவிளை செய்துவந்த இந்தியா, ஆப்கான் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது போகப்போகத் தெரியும். தற்போதுள்ள சூழலில் காபூலில் உள்ள இந்தியர்களை மீட்பது ஒன்றே குறிக்கோள் என்ற நிலையில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்க கூட்டு படைகள் மீட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம் என தாலிபான்கள் தரப்பும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories