உலகம்

ஒற்றை தோட்டாவால் 9 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்; ஆப்கன் மக்களை நினைத்து நொறுங்கிய மலாலா!

2012ம் ஆண்டு தாலிபன்களால் தாக்குதலுக்கு ஆளான மலாலா அது குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

ஒற்றை தோட்டாவால் 9 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்; ஆப்கன் மக்களை நினைத்து நொறுங்கிய மலாலா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

20 ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் தாலிபன்கள் கொண்டு வந்துள்ளனர். இதனால் மீண்டும் பெண்களுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும் நிலை உண்டாகும் என்பதால் ஆப்கானியர்கள் பலரும் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 15 நாட்கள் நிறைவு பெறும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுகாறும் பதற்ற நிலை முடிவுறவில்லை. மேலும் எப்படியாவது தப்பித்து வேறு நாட்டுக்குச் சென்றிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் மக்கள் பலரும் தலைநகர் காபூல் விமான நிலையத்திலேயே நித்தமும் காத்துக்கிடக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2012ம் ஆண்டு தாலிபன்களால் சுடப்பட்டு மரணத்தின் விளிம்புக்கேச் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா இன்றளவும் அந்த ரணத்தில் இருந்து மீண்டுக் கொண்டிருப்பதாக மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தாலிபன்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை. இதுவரையில் ஆறு அறுவை சிகிச்சைகள் என் தலையில் செய்யப்பட்டிருக்கிறது. தாலிபன்களால் சேதப்படுத்தப்பட்ட எனது உடலை மருத்துவர்கள் தொடர்ந்து சீரமைத்து வருகின்றனர்.

ஒரே ஒரு தோட்டாவில் இருந்து 9 ஆண்டுகளாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பல மில்லியன் கணக்கான தோட்டாக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கண்டு என் நெஞ்சம் நொறுங்குகிறது என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், தாலிபன்களின் பயங்கர தாக்குதல் குறித்த தனது நினைவலைகளையும் மலாலா பகிர்ந்துள்ளார்.

முன்னதாக பெண் உரிமைக்காக குரல் கொடுத்த மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories