எங்களை எதிர்த்தவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். பெண்களுக்கு தேவையான உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் என வாய்ப்பந்த இட்ட தாலிபன்கள் தற்போது பெண்களை நடமாட விடாமல் தடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றிய தாலிபன்கள் தற்போது தங்கள் தலைமையிலான அரசை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் ஈட்பட்டு வருகின்றனர். இதனால் தாலிபன்களால் கொடுங்கோல் ஆட்சியே மீண்டும் அமையும் என அச்சத்தால் அந்நாட்டு மக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே “ஆப்கான் மண் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தப்படாது. மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். ஷரியத் விதிமுறைகள்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். முஸ்லீம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும்” என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் நடைமுறையில் நடப்பது என்னவோ அவர்கள் பேசியதற்கு மாறாக உள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் அரசு ஊடகங்களில் பணியாற்றி வந்த பெண்களை அதிரடியாக வேலையில் இருந்து தூக்கியிருக்கிறார்கள் தாலிபன்கள். அவர்களுக்கு பதிலாக தாலிபன்களை சேர்ந்தவர்கள் செய்தி வாசிப்பாளராக அமர வைத்துள்ளார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள பெண் ஊடகவியலாளர்கள், இனி நடப்பதற்கு என்ன இருக்கிறது? கடந்த 20 ஆண்டுகளாக என்னவெல்லாம் சாதித்தோமோ எல்லாம் பறிபோய்விட்டது. தாலிபன்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். வெறும் பேச்சுமட்டுதான் என கூறியிருக்கிறார்.
அதேபோல, ஷப்னம் தவ்ரான் என்ற மற்றொரு பெண் செய்தியாளர், முந்தைய தாலிபன்களின் ஆட்சியின் போது இருந்த நடைமுறைகள் கெடுபிடிகள் இருக்காது என தாலிபன்கள் கூறியதை நம்பினேன். ஆனால் அலுவலகத்துக்குச் சென்றதும் வெளியே அனுப்பிவிட்டார்கள். இவ்வாறு சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக தாலிபன்கள் செயல்பட்டு வருவது ஆப்கானிஸ்தானில் பெண்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் அவலம் ஏற்படும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.