உலகிலேயே சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது.
சி.சி.டி.வி கேமராக்களே பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு போலிஸாருக்கு உதவுகின்றன. பல குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.சி.டி.வி கேமராக்களே பயன்படுகின்றன.
நகர்ப்புறங்களைப் போலவே தற்போது கிராமப் பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமரா பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை 'போர்ப்ஸ் இந்தியா' ஊடகம் வெளியிட்டுள்ளது.
2.5 ச.கி.மீ (1 சதுர மைல்) பரப்பளவில் நிறுவப்பட்ட அதிகபட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் இந்த மிகு கண்காணிப்பு நகரங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அதிக சி.சி.டி.வி கேமராக்களை கொண்டுள்ளதாக இந்திய தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லியில் 2.5 ச.கி.மீ பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன.
அடுத்ததாக 2.5 சதுர கி.மீட்டருக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் 2.5 சதுர கி.மீட்டருக்கு 610 கேமராக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.5 ச.கி.மீட்டருக்கு 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திl உள்ளது. உலகிலேயே அதிக சி.சி.டி.வி கேமராக்களைக் கொண்ட முதல் 20 நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.