ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 140-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், அமெரிக்க மாலுமிகள் 12 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. காபூல் குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம்.” என எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.