அமெரிக்காவின் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.
மேலும் தாலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது அனைவரும் வேலைக்கு வரவேண்டும் எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களின் சொல்லுக்கு எதிராகத்தான் இவர்கள் வரலாறு உள்ளது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது, தனியாக ஒரு பெண் சாலையில் செல்லக்கூடாது என பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தவர்கள்தான் இந்த தாலிபான்கள்.
தற்போது இவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க உள்ளதால் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தாலிபான்களை எதிர்த்து போராடாமல் ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தாலிபான்களை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு சமூக பாதுகாப்பு, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, அரசியல் பங்கேற்பு உரிமை உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் போராடி வரும் பெண்களுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பதற்றமான சூழலிலும் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.