இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, 2020ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. இதனால், தனது தாயார் டயானா சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஹாரி தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். ஹாரி, மேகன் மார்க்கல் அரச குடும்பத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பத்திரிகைகள், எதனால் விலகினார்கள் என்பது குறித்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டன.
ஆனால், இந்த சர்ச்சை குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருவரும் மவுனமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு அளித்த பேட்டி, ஒன்றில் தங்களின் மவுனத்தைக் கலைத்துள்ளனர்.
இந்த பேட்டியில், மேகன் மார்க்கல், "நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். மேலும், பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டது.
அரசு குடும்பத்தின் இந்த பேச்சால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிந்தித்து இருக்கிறேன். உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்.
அரண்மனைக்குச் சென்றபோது என்னுடைய பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், சாவி ஆகிய அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். அதனால், அரண்மனையை விட்டு வெளியேற முடியவில்லை. ஒரு கால் டாக்சியை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பேட்டியில் இளவரசர் ஹாரி கூறுகையில், "அந்த சமயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அரச குடும்பத்தில் சிக்கி கொண்டிருந்தேன் என்பது தெரியாமலேயே, மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போது, என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் சிக்கிக்கொண்டுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறியபோது என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தந்தை இளவரசர் சார்லஸ் தற்போது என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்" என தெரிவித்தார். ஹாலிவுட் நடிகையான மேகன் ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.